எண்ணூரில் கப்பல்கள் மோதியதில், கடலில் எண்ணெய் கலந்த்து. இந்த விவகாரத்தில் மத்திய மாநில அரசுகளே நடவடிக்கை எடுக்கலாம் என்று உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்துள்ளது.

சென்னை எண்ணூர் துறைமுகத்தில் நடந்த கப்பல் விபத்து குறித்து மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை எண்ணூர் துறைமுகம் அருகில் இந்தியாவை சேர்ந்த எண்ணெய் கப்பலும், ஈரானை சேர்ந்த எரிவாயு நிரப்பி வந்த கப்பலும் மோதி விபத்துக்குள்ளாகின. இதன்காரணமாக சென்னை கடல் பகுதியில் எண்ணெய் படலம் பரவியுள்ளதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. மீன்கள் செத்து மிதப்பதால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த கப்பல்கள் இந்திய கடல் எல்லையை கடந்து விட்டால், கடலில் பரவியுள்ள எண்ணெயை அகற்றுவதற்கான செலவையும், மீனவர்களுக்கான இழப்பீட்டை வசூலிக்க முடியாது.

எனவே இரு கப்பல்களை சிறைபிடிக்க வேண்டும், கப்பல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி தேசிய மீனவர் நலச்சங்கம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கப்பல்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் எண்ணெய் கடலில் அப்புறப்படுத்தும் நடவடிக்கை அரசு மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். இதையடுத்து, இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவே, அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் கூறி வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.