- Home
- Tamil Nadu News
- அப்பாடா! தமிழகத்தில் 6 நாட்கள் கொட்டப்போகும் மழை.. எங்கெங்கு? வானிலை லேட்டஸ்ட் அப்டேட்!
அப்பாடா! தமிழகத்தில் 6 நாட்கள் கொட்டப்போகும் மழை.. எங்கெங்கு? வானிலை லேட்டஸ்ட் அப்டேட்!
தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எங்கெங்கு மழை பெய்யும்? பனியின் தாக்கம் எப்படி இருக்கும்? என்பது குறித்து பார்க்கலாம்.

இரவில் பனி; பகலில் வாட்டும் வெயில்
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக இரவிலும், அதிகாலையிலும் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் ஜம்மு, காஷ்மீர் போல் பனிப்பொழிவு இருந்து வருகிறது.
மலைப்பிரதேசங்களை தவிர மற்ற இடங்களில் பகலில் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. ஒரு இடத்தில் கூட மழை பெய்யவில்லை. மழை எப்போது பெய்யும்? என மக்கள் ஏங்கித் தவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது இன்று (டிசம்பர் 28) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அதிகாலை வேளையில் ஒரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நாளை (டிசம்பர் 29) டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
தென் தமிழகம், வட தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
டிசம்பர் 30ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜனவரி 2 மற்றும் 3ம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் பனி மூட்டம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29º செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
நாளை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

