- Home
- Tamil Nadu News
- விவசாய நிலத்தில் தங்கப் புதையல்.. தோண்டத் தோண்ட வெளிவந்த 86 தங்க நாணயங்கள் மீட்பு!
விவசாய நிலத்தில் தங்கப் புதையல்.. தோண்டத் தோண்ட வெளிவந்த 86 தங்க நாணயங்கள் மீட்பு!
Gold Treasure: திருப்பத்தூரில் விவசாய நிலத்தை தோண்டியபோது தங்கப் புதையல் கிடைத்துள்ளது. விவசாயி நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட 86 தங்க நாணயங்களை அரசு அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

விவசாய நிலத்தில் தங்கப் புதையல்
திருப்பத்தூர் மாவட்டம் சுந்தரம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஆதவன். விவசாயியான இவர் தனது நிலத்தைச் சமன் செய்தபோது எதிர்பாராத விதமாக ஒரு புதையல் இருப்பது கண்டெடுக்கப்பட்டது. அதாவது ஒரு பழங்காலக் குடுவையில் 86 தங்கக் காசுகளை ஆதவன் கண்டெடுத்துள்ளார். ஆனால் தங்கப் புதையல் புதையல் கிடைத்ததை அவர் அரசு அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் மறைத்து வைத்திருந்ததாக தெரிகிறது.
அரசு அதிகாரிகள் கைப்பற்றினர்
ஆனால் அவர் தங்கப் புதையல் கண்டெடுத்த செய்தி காட்டுத்தீ போல் பரவியது. இது குறித்து தகவல் அறிந்ததும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் விரைந்து வந்து ஆதவனிட இருந்த தங்க நாணயங்களை கைப்பற்றினார்கள். அந்த தங்க நாணயங்கள் எந்த காலத்தை சேர்ந்தது? என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது.
புதையலை மறைத்து வைப்பது குற்றம்
1878ம் ஆண்டு இந்திய புதையல் சட்டத்தின் (Indian Treasure Trove Act) படி ஒருவருக்குப் புதையல் கிடைத்தால் அவர் உடனடியாக அந்த மாவட்டத்தின் ஆட்சியரிடமோ அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்திலோ தகவல் தெரிவிக்க வேண்டும். அந்தப் புதையலை மறைப்பதோ அல்லது ரகசியமாக விற்பனை செய்வதோ சட்டப்படி தண்டனைக்குரிய செயலாகும்.
சட்ட விதிகள் சொல்வது என்ன?
தங்கப்புதையல் குறித்து தகவல் தெரிவித்தால் அரசு அதை உடனே பறிமுதல் செய்துவிடும் என்று பயப்படத் தேவையில்லை. அந்தப் பொருளின் உண்மையான உரிமையாளர் யார் என்பதைக் கண்டறியும் வரை அரசு அதைப் பாதுகாக்கும். தனியார் நிலம் மற்றும் அரசு நிலங்களில் கிடைக்கும் புதையல்களுக்கு வெவ்வேறு விதமான சட்ட நடைமுறைகள் உள்ளன.
அதாவது உங்கள் நிலத்தில் கிடைக்கும் புதையல் உங்களுக்கே சொந்தமாகும். அதற்கு உரிமை கோர வேறு வாரிசுகள் யாரும் வராத பட்சத்தில், நீதிமன்றத் தீர்ப்புகளின்படி அது உங்களுக்கே சேரும்.
அரசு நிலத்தில் புதையல் கிடைத்தால்?
உங்கள் நிலத்தில் வேறொருவர் புதையலைக் கண்டுபிடித்தால் சட்டப்படி அது சமமாகப் பிரிக்கப்படும். புதையலின் 50% நில உரிமையாளருக்கும், 50% கண்டுபிடித்தவருக்கும் வழங்கப்படும்.
அதே வேளையில் காடுகள், ரயில்வே அல்லது பொதுப்பணித்துறை நிலங்களில் புதையல் கிடைத்தால் அது முழுக்க முழுக்க அரசுக்கே சொந்தம். புதையல் கண்டுபிடித்தவருக்கு அரசு விருப்பப்பட்டால் தான் சன்மானம் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

