தமிழகத்தில் காவிரிப் பிரச்சினையை முன்னெடுத்து தற்போது நடைபெற்று வரும் இந்தப் போராட்டம், அமெரிக்காவின் புகழ்பெற்ற செய்தி நாளிதழான நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் செய்தியாக வெளியாகியுள்ளது.

இந்தியாவில் நடத்தப்படும் IPL போட்டிகள் இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் கவனம் ஈர்த்தது. இதை எதிர்த்தால் தமிழகத்தின் நிலை என்னவென்று உலக அளவில் தெரியவரும் என எர்ப்பாக நடத்திய இந்த  போராட்டமும் உலகத்தின் கவனத்தைப் பெற்றுள்ளது.

ஐபிஎல் போட்டியைப் புறக்கணித்ததன் மூலம் உலகத்தின் கவனத்துக்கு எடுத்துச் சென்றனர்

இது குறித்து நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், "இந்தியாவில் காவிரி நதியின் உரிமைக்காக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையில் பல ஆண்டுகளாக விவாதங்கள் நடைபெற்று வந்தன.

ஆனால் தற்போது தமிழகத்தில் நிலவும் வறட்சியின் காரணமாக விவசாயிகள் தங்களது கோரிக்கைகளுக்கு அதிக நிர்பந்தம் அளிக்கத் தொடங்கியுள்ளனா். இதற்காக ஐபிஎல் போட்டியைத் தேர்ந்தெடுத்து அதன் மூலம் அவர்களது கோரிக்கைகளை மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டனர். 11 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த ஐபிஎல் போட்டியானது, உலகெங்கும் உள்ள தலைசிறந்த வீரர்கள் மற்றும் பார்வையாளர்களை தன்வசம் ஈர்த்துள்ளது.

சென்னையில் நடந்த முதல் போட்டியின் போது விவசாயிகள், அரசியல் கட்சிகள் மற்றும் திரையுலகத்தை சேர்ந்தவர்கள் மைதானத்துக்கு உள்ளேயும், வெளியேயும் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். மைதானத்துக்கு உள்ளே காலணிகளை வீசிய சிலரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதே போல் ஐபிஎல் போட்டிக்கு தொடர்ந்து எதிர்ப்புகளும், போராட்டங்களும் வலுப்பெற்றால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். மேலும் கிரிக்கெட் வீரர்கள் பாதுகாப்பு கருதி சென்னையில் நடைபெறவிருந்த எஞ்சிய போட்டிகள் அனைத்தும் சென்னையிலிருந்து 600கிலோமீட்டர் தொலைவிலுள்ள புனேவுக்கு மாற்றப்பட்டுள்ளன.

இரண்டு ஆண்டு தடைக்கு பின்னர் தற்போது சென்னை மைதானத்தில் மீண்டும் போட்டிகள் நடைபெறவிருந்தன. ஆனால் இந்தப் போராட்டத்தால் சென்னையில் மீண்டும் போட்டி நடைபெறுவதற்குக் குறைந்தது ஒரு ஆண்டாவது காத்திருக்க வேண்டும்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சென்னையில் கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பு கருதி போட்டிகள் நடைபெறும் இடத்தை மாற்றக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஏற்று தற்போது சென்னையில் நடைபெறவிருந்த போட்டிகள் அனைத்தும் புனேவிற்கு மாற்றப்பட்டது.

இது குறித்து ஐபிஎல் போட்டி தலைவர் ராஜிவ் சுக்லா, "சென்னையில் நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கு தமிழக காவல்துறை பாதுகாப்பு அளிக்க மறுத்ததால் வீரர்களின் பாதுகாப்பு கருதி இனி வரும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் போட்டிகள் புனே மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளன" என்று கூறினார்.

இதற்கிடையே ,சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை பெற்ற பார்வையாளர்களுக்கு, அதற்கான பணத்தை திருப்பி வழங்க தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. என அதில் கூறப்பட்டுள்ளது.