பழனியில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் லீனாவிற்கு மருத்துவமனை உரிமையாளர் மதனகோபால் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. 

செவிலியருக்கு பாலியல் தொல்லை

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த செவிலியர் லீனா. தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மருத்துவமனையில் பணியாற்றும் லீனாவிற்கு மருத்துவமனையின் உரிமையாளரும் மருத்துவருமான மதனகோபால் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மருத்துவமனைக்கு வேலைக்குச் செல்லாமல் லீனா வீட்டிலேயே இருந்துள்ளார். அப்போதும் மருத்துவர் மதனகோபால் விடாமல் தனது ஆசைக்கு இணங்ககோரி லீனாவை செல்போனில் அழைத்து பாலியல் தொந்தரவு கொடுப்பதும் ஆபாசமாக குறுஞ்செய்திகளை பகிர்ந்து வந்துள்ளார்.

எச்சரித்த குடும்பத்தினர்

தன்னைவிட வயதில் மூத்த மருத்துவர் என்பதால் லீனா மருத்துவரின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தாரை அழைத்துப் புகார் தெரிவித்துள்ளார். அப்போது மருத்துவர் மதனகோபாலை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கடுமையாக எச்சரித்துள்ளனர். சில நாட்கள் அமைதியாக இருந்த மருத்துவர் மதனகோபால் மீண்டும் லீனாவின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பாலியல் தொந்தரவு கொடுக்க துவங்கி உள்ளார். இதனால் மன வேதனை அடைந்த லீனா பழனி நகர காவல் நிலையத்தில் மதனகோபால் அனுப்பிய குறுஞ்செய்திகள் மற்றும் பேசிய ஆடியோக்களை வைத்து புகார் அளித்துள்ளார்.

தலைமறைவான மருத்துவமனை உரிமையாளர்

இந்த புகாரை அடுத்து நகர காவல் துறை ஆய்வாளர் மணிமாறன் பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவர் மதனகோபால், அவரது மனைவி அமுதவள்ளி உள்ளிட்ட நான்கு பேர் மீது பெண்ணை மிரட்டியது, பாலியல் தொந்தரவு கொடுத்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார். காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது குறித்து தகவல் அறிந்த மருத்துவர் மதனகோபால் தலைமறைவான நிலையில் போலீசார் அவரை தேடி வருகின்றனர். பழனியில் மருத்துவர் தனது மருத்துவமனையில் பணியாற்றிய செவிலியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.