தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிக் கொண்டிருக்கும்போது பைக்கில் வந்த இளைஞர் செய்த செயல். கழுத்தைப் பிடித்து தள்ளிய நாம் தமிழர் கட்சியினரால் பரபரப்பு.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட செய்துங்கநல்லூரில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வேலுநாச்சியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையோரம் அமைக்கப்பட்டு இருந்த பொதுக்கூட்ட என்பதால் அந்த வழியாக இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம், கனரக வாகன வாகனங்களில் சென்றவர்கள் சீமான் பேசுவதைக் கண்டு கையசைத்து சென்றனர்.

அப்போது அந்த வழியாக ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் சீமான் பேசுவதை கண்டதும் அங்கு நின்றார். அப்போது அண்ணா பேசுங்கள் பேசுங்கள் என்று அவர் கோஷமிட்டார். அப்போது சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததால் போலீசார் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர்.

ஆனால் அந்த இளைஞர் அங்கு இருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றவே அங்கிருந்த நாம் தமிழர் கட்சியினர் அவரை கழுத்தை பிடித்து தள்ளியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு இருந்த போலீசார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

அதேபோல் மனநலம் பாதிக்கப்பட்ட மற்றொரு நபர் கையில் விசில் வைத்துக் கொண்டு போக்குவரத்தை ஒழுங்கு செய்தது அனைவரையும் கவர்ந்தது. இதற்கிடையில் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு வேலுநாச்சியார் மேடை நாடகம் நடந்தது. அதில் இளம் பெண் ஒருவர் வேலுநாச்சியார் போல் வேடம் அணிந்து கையில் வாளுடன் வசனங்கள் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரது கட்சி நாம் தமிழர் கட்சி பெண்கள் சிலர் தலையில் தமிழக வெற்றி கழகத்தின் துண்டை அணிந்தபடி கிண்டலாக அவருடன் செல்பி எடுப்பது போல் அந்த நாடகத்தை அரங்கேற்றம் செய்தனர். இது அங்கிருந்தவர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியது.