Asianet News TamilAsianet News Tamil

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை; தமிழகத்தை பாலைவனமாக்கும் சூழ்ச்சியில் கேரளா - சீமான் காட்டம்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி தமிழகத்தை பாலைவனமாக்கும் சூழ்ச்சியில் கேரளா அரசு ஈடுபட்டுள்ளதாகக் கூறி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ntk chief coordinator seeman condemns kerala government for try to build check dam at silandhi river vel
Author
First Published May 20, 2024, 7:47 PM IST | Last Updated May 20, 2024, 7:47 PM IST

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் கரூர், திருப்பூர் மாவட்டங்களின் நீர்த்தேவையை நிறைவு செய்யும் அமராவதி ஆறு, காவிரி ஆற்றின் நீர் வரத்தை அதிகரிக்கும் முக்கிய துணை ஆறுகளில் ஒன்றாகும். 1957ஆம் ஆண்டு அமராவதி ஆற்றின் குறுக்கே பெருந்தலைவர் காமராசர் அவர்களால் 4 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட அமராவதி அணை கட்டப்பட்டது. ஆனால், திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் அணையின் கொள்ளளவு 3 டி.எம்.சியாகக் குறைந்து விட்டது.

கடந்தகால திமுக ஆட்சியில், காவிரியின் குறுக்கே கர்நாடக அடுத்தடுத்து அணைகளைக் கட்டி காவிரிப்படுகையை வறண்ட நிலமாக்கியதுடன் தற்போது மேகதாது அணை கட்ட 9 ஆயிரம் கோடிகளை ஒதுக்கியுள்ளது. அதுமட்டுமின்றி, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி வடமாவட்டங்களையும் வறண்ட பூமிமாக்கியது. பாலாற்றின் குறுக்கே ஏற்கனவே 22 தடுப்பணைகளைக் கட்டியுள்ள ஆந்திர அரசு, மேலும் ஒரு தடுப்பணை கட்டுவதற்கு கடந்த பிப்ரவரி மாதம் ரூ. 215 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. மேலும், உலகின் மிகச்சுவையான நன்னீர் ஆறுகளில் ஒன்றான சிறுவாணி ஆற்றின் குறுக்கே கூலிக்கடவு – சித்தூர் சாலையில் கேரள அரசு ஏற்கனவே தடுப்பணையைக் கட்டி முடித்துள்ளதுடன், மேலும் 2 இடங்களில் தடுப்பணைகளைக் கட்ட தீவிர நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், தற்போது சிலந்தி ஆற்றின் குறுக்கேயும் தடுப்பணை கட்ட முயல்வது தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் கொடுஞ்செயலாகும்.

நெல்லையில் பசுபதி பாண்டியன் ஆதரவாளர் வெட்டி படுகொலை; காதலி கண்முன்னே வெட்டி சாய்த்த கொடூரம்

திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் ஆற்று நீர் உரிமை ஒவ்வொன்றாகப் பறிபோவது தொடர்கதையாகிவிட்டது. அவற்றைத் தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் திமுக அரசு செயலற்று இருப்பது தமிழ்நாட்டின் உரிமை மீதான அதன் அக்கறையின்மையையே காட்டுகிறது.

இரு மாநிலங்களுக்கு இடையிலான நதியின் குறுக்கே, எந்த ஒரு மாநிலமும் மற்றொரு மாநிலத்தின் ஒப்புதலின்றித் தன்னிச்சையாக எவ்வித அணையும் கட்டமுடியாது என்பதை உச்சநீதிமன்றம் பலமுறை தனது தீர்ப்புகளில் தெளிவுபடுத்தியுள்ளது. கேரள மாநிலத்தை ஆளும் கம்யூனிஸ்ட் அரசு தமிழ்நாடு அரசின் ஒப்புதலின்றி முறைகேடாகத் தடுப்பணைகளைக் கட்டிவருவது அப்பட்டமான நதிநீர் சட்ட விதிமீறலாகும்.

கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் நெருங்கிய நட்பு பாராட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணியில் உள்ள திமுக அரசு, தமிழ்நாட்டின் உரிமையைப் பறிக்கும் கம்யூனிஸ்ட் அரசின் அத்துமீறலை இதுவரை கண்டிக்காதது ஏன்? கேரள அரசு மீது எவ்வித சட்ட நடவடிக்கையும் இதுவரை எடுக்காதது ஏன்? காவிரி நதிநீரைத் தரமறுக்கும் கர்நாடக மாநில பாஜக அரசின் அத்துமீறலுக்குத் துணைநின்று தமிழ்நாடு பாஜக துரோகம் செய்கிறது. அதற்கு, சற்றும் குறைவில்லாதது, சிறுவாணி மற்றும் சிலந்தி நதிநீரைத் தடுக்கும் கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசின் அத்துமீறலுக்குத் துணைபோகும் திமுக அரசின் பச்சைத்துரோகமாகும்.

கோவையில் வெளுத்து வாங்கிய கனமழை; சாலையில் பெருக்கெடுத்த மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதி

ஆகவே, சிலந்தி மற்றும் சிறுவாணி நதிகளின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்டி தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் கேரள அரசின் எதேச்சதிகாரப்போக்கிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் உடனடியாக வழக்கு தொடர்ந்து, சமரசமற்ற சட்டப்போராட்டம் நடத்தி தமிழர்களின் நதிநீர் உரிமை பறிபோகாமல் பாதுகாக்க வேண்டுமெனத் தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios