சிவகங்கை,

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டார தலைநகரங்களில் வருகிற 10–ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் இராமராஜ் தலைமையில் நடைபெற்றது. மாநில பொருளாளரும், மாவட்ட செயலாளருமான ஜோசப் சேவியர் வரவேற்று பேசினார். இந்தக் கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பாண்டியராஜன், பெரியசாமி மற்றும் ஓய்வுபெற்றவர்கள் பிரிவு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மாவட்ட செயலாளர் ஜோசப் சேவியர் அறிவித்ததாவது:

“கடந்த 21 ஆண்டுகளாக மத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழகத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர்களும் பெற்று வந்தனர். ஆனால் கடந்த 6–வது ஊதிய குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படவில்லை. எனவே தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 7–வது ஊதிய குழுவை விரைவில் அமைக்கவும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இதேபோல் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வி கொள்கை வரைவு முன் மொழிவில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஏற்பட இருக்கும் பாதிப்புக்களை நீக்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஏற்கனவே அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.

மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 10–ஆம் தேதி மாலை 5 மணிக்கு மாநிலம் தழுவிய அளவில் வட்டார தலைநகரங்களில் உதவி தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டள்ளது.”

என்று அவர் அறிவித்திருந்தார்.