சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுநிலை இதழியல் படிப்பு  பயின்று வந்தவர் வளர்மதி, கதிராமங்கலம், நெடுவாசல் கிராமங்களில் ஓஎன்ஜிசி நிறுவனம் செயல்படுத்தி வரும் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராக துண்டுபிரசுரங்களை விநியோகித்து, விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார். பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தார்.

இதனைத் தொடர்ந்து நக்சலைட்டுகளுக்கு ஆள் சேர்க்கும் புகாரில் வளர்மதி கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து வளர்மதி மீது குண்டர் சட்டம் போடப்பட்டதையடுத்து அவர் தற்பொழுது கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  

மேலும் குண்டர் சட்டம் போடப்பட்டதால்  மாணவி வளர்மதி பல்கலைக்கழகத்திலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வளர்மதி மீதான குண்டர் சட்டத்தினை ரத்து செய்யக் கோரி, அவரது தந்தை மாதையன் சென்னை உயர்நீதி மன்றத்தில் நேற்று  மனு தாக்கல் செய்துள்ளார். 

அந்த மனுவில் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிரான போராட்டங்களுக்கு தனது மகள் வளர்மதி உரிய அனுமதி பெற்றுத்தான் போராடியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அரசியல் காரணங்களுக்காக தனது மகள் பழி வாங்கப்படுவதாகவும், எனவே வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும்  மாதையன் வலியுறுத்தியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கலையரசன் தலைமையிலான அமர்வு, இது குறித்து ஒரு வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி சேலம் போலீஸ் கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.