ஈரோடு

வீட்டில் பண்டல் பண்டலாக பதுக்கி வைத்திருந்த ரூ.7 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலையை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனையின்போது பறிமுதல் செய்தனர்.

தமிழ்நாடு முழுவதும் குட்கா, பான் மசாலா போன்ற போதைப் பொருட்கள் விற்க தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் தடையை மீறி பல்வேறு பகுதிகளிலும் இந்த புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் உத்தரவின் பேரில் ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களிலும் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

அதன்படி நேற்று ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி பி.கலைவாணி தலைமைமையில் அதிகாரிகள் ஈரோடு மாநகராட்சி பகுதியில் சோதனை நடத்தினர்.

ஈரோடு பேருந்து நிலையத்தில் உள்ள சில்லறை விற்பனை கடைகள், சந்தைப் பகுதியில் உள்ள மொத்த வியாபார கடைகள் மற்றும் ஏற்கனவே குட்கா விற்பனை செய்து வந்த மொத்த வியாபாரிகளின் கிடங்குகளில் இந்த குழுவினர் சோதனை நடத்தினர்.

அப்போது, இந்திராநகர் இலட்சுமி நாராயணன் வீதியில் வசித்து வரும் வட இந்தியர் ஒருவரின் வீட்டில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதை புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். வீட்டில் உள்ள ஒரு அறையில் புகையிலை பொருட்கள் பண்டல் பண்டலாக குவித்து போடப்பட்டு இருந்தன.

இவற்றைக் கைப்பற்றிய அதிகாரிகள் அறையில் இருந்த அனைத்து குட்கா பண்டல்களையும் கைப்பற்றினார்கள். பின்னர் புகையிலை ரகங்கள் வாரியாக மாதிரி சேகரித்து உணவு பகுப்பாய்வு ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் அறையில் இருந்தப் பொருட்களை அப்படியே சீல் வைத்தனர்.

இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி மருத்துவர் பி.கலைவாணி கூறியது:

“உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மூன்று குழுக்களாக பிரிந்து பல்வேறு இடங்களிலும் சோதனை நடத்தினோம். அப்போது சில்லரை விற்பனையாளர்களிடம் குட்கா, பான்மசாலா போன்ற புகையிலை பொருட்களை யார் விநியோகம் செய்வது என்று விசாரணை நடத்தினோம். அப்போது இந்திரா நகர் இலட்சுமி நாராயணன் வீதியை சேர்ந்த வட மாநில வாலிபர் ஒருவர் வினியோகம் செய்வது தெரியவந்தது.

உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதிக்கு வந்தோம். அங்கு சம்பந்தப்பட்ட வாலிபர் இருந்தார். அவரிடம் விசாரித்தபோது கணேஷ் என்பவருடைய மகன் யோகேஷ் (33) என்று கூறினார். அவரிடம் குட்கா குறித்து விசாரித்தபோது அதைப்பற்றி எதுவும் தெரியாது என்றார்.

ஆனால் அங்குள்ள ஒரு அறை பூட்டப்பட்டு இருந்தது. அதை திறக்கும்படி கூறினோம். அதற்கு அவர் மறுத்தார். நாங்கள் அறையை திறக்க வற்புறுத்தியபோது, அறையின் சாவி இல்லை என்று கூறினார்.

எனவே கருங்கல்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தோம். காவலாளர்கள் வந்ததும் அவர்களின் முன்னிலையில் யோகேசின் கையாலேயே கதவை உடைத்தோம். அங்கு ஒரு அறை முழுவதும் குட்கா, பான் மசாலா புகையிலை பொருட்கள் குவிந்து கிடந்தன. அத்துடன் தீப்பெட்டி பண்டல்களும் இருந்தன.

முன் அறையில் தீப்பெட்டி பண்டல்களை வைத்து விட்டு, அடுத்த அறையில் குட்கா பண்டல்கள் வைக்கப்பட்டு இருந்தன. உள்ளே 83 பண்டல்களில் சுமார் ரூ.7 லட்சம் மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்கள் இருந்தன. உடனடியாக அவற்றை கைப்பற்றினோம்.

இதில் இருந்து மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. குட்காவில் சேர்க்கப்பட்டு உள்ள ‘நிகோடின்’ ரசாயனத்தின் அளவு பரிசோதனைக்காக இந்த மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பப்படும். ஆய்வு முடிவின் அடிப்படையில் வாலிபர் யோகேஷ் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், பரிசோதனை முடிவு வந்ததும் இங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ள புகையிலை பொருட்கள் அழிக்கப்படும்” என்று மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி மருத்துவர் பி.கலைவாணி கூறினார்.

இந்த சோதனையின்போது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பூபாலன், முத்து கிருஷ்ணன், உதவி ஆய்வாளர்கள் சரவணன், கோமதி உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.