தென்மேற்கு பருவமழை கடந்த வாரத்துடன் முடிவடைந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு  வங்கக்கடலில் புயல் உருவாகி ஒடிசாவை தாக்கியதால் காற்று வீசும் திசையில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் எதிர்பார்த்தப்படி வட கிழக்கு பருவமழை தொடங்குவதற்கு தாமதம் ஏற்பட்டது, இந்நிலையில் காற்றின் திசையில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளதால் வட கிழக்கு பருவ மழை ஏற்கனவே அறிவித்தபடி வரும் 26 ஆம் தேதி தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது தென் மேற்கு பருவ காற்று திசை மாறி கிழக்கில் இருந்து வீசத் தொடங்கியுள்ளது என்றும் இதனால் நிச்சயமாக 26 ஆம் தேதி முதல் பருவ மழையை எதிர்பார்க்கலாம்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் , இலங்கை மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று  இரவு தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என்றும் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தேதிகளில்  மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் 26, 27  ஆகிய இரண்டு நாட்களில் தமிழகம் முழுவதும் கன மழை கொட்டித் தீர்க்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சிதம்பரம், வானூர் தலா 9 செ.மீ., ஆனைக்காரன் சத்திரம் 8 செ.மீ., பாபநாசம், மரக்காணம், பேச்சிப்பாறை, சத்தியமங்கலம் தலா 7 செ.மீ., திருச்செந்தூர், தென்காசி தலா 6 செ.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது