கன்னியாகுமரி 

அரசின் அனுமதி இல்லாமல் யாரும் ஆதார் தகவல்களை டவுன்லோடு செய்யக் கூடாது என்று கன்னியாகுமரி ஆட்சியர் பிரசாந்த் வடநேரே எச்சரித்துள்ளார்.

"தொழில் நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம்" தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  இது வருகிற 13-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.

இதனையொட்டி கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், கோணத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் ஐ.டி.ஐ. மாணவர்கள் கலந்துதுகொண்ட விழிப்புணர்வு பேரணி நேற்று நடைப்பெற்றது. 

வேலைவாய்ப்பு அலுவலகம் முன்பிருந்து தொடங்கிய இந்தப் பேரணியை ஆட்சியர் பிரசாந்த் வடநேரே கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். இந்தப் பேரணியானது இராமன்புதூர் வரை சென்றுவிட்டு மீண்டும் வேலைவாய்ப்பு அலுவலகத்தை வந்து சேர்ந்தது. இதில் கலந்துகொண்ட மாணவர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திக்கொண்டு சென்றனர். 

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு உதவி இயக்குனர் காளிமுத்து உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். பேரணிக்கு பிறகு ஆட்சியர் பிரசாந்த் வடநேரே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அதில் அவர், "போலி வாக்காளர் அடையாள அட்டை அச்சிடும் மையங்கள் கன்னியாகுமரியில் செயல்படுகிறதா? என்பதை தீவிரமாக கண்டறிந்து அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

போலியாக வாக்காளர் அடையாள அட்டை அச்சிட்டு தற்போது சிக்கியவர்களுக்கு பின்னணியில் யார் இருந்தாலும் அவர்களையும் கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்களும் கணினி மையங்களுக்கு சென்று ஆதார் தகவல்களை டவுன்லோடு செய்யும்போது, அந்த மையம் அரசின் அனுமதி பெற்றுதான் இயங்குகிறதா? என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம். 

மேலும், அரசின் அனுமதி இல்லாமல் யாரும் ஆதார் தகவல்களை பதிவிறக்கம் செய்யக்  கூடாது.  இது தொடர்பாக எப்போது வேண்டுமானாலும் மாவட்ட நிர்வாகத்தை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்" என்று அவர் எச்சரித்தார்.