தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது - முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட்..

தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

No one can tarnish Valluvar in Tamil Nadu - Chief Minister MK Stalin's tweet.. Rya

ஒவ்வொரும் ஆண்டும் தை 2-ம் நாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும் அவரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திருவள்ளுவர் தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து தனது X வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள்! பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும் - முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும் - அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை என்ற கருத்தியலையும் வழிகாட்டியவர் வள்ளுவர்.

133 அடியில் சிலையும் - தலைநகரில் கோட்டமும் அமைத்துப் போற்றும் குறளோவியத் தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது. குறள் நெறி நம் வழி! குறள் வழியே நம் நெறி!” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக திருவள்ளுவர் தினத்தை ஒட்டி காவி உடையுடன் கூடிய திருவள்ளுவர் படத்தை வைத்து இன்று ஆளுநர் மரியாதை செலுத்தினார். ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தரிசனத்திற்காக தனது மனைவி உடன் சென்றுள்ள ஆளுநர், ராமநாதபுரம் அரசு சுற்றுலா மாளிகையில் உள்ள திருவள்ளுவர் படத்திற்கு மரியாதை செலுத்தினார். 

தலைசிறந்த தமிழ்ப் புலவரான திருவள்ளுவரின் ஞானம் வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறது.. பிரதமர் மோடி தமிழில் ட்வீட்..

மேலும் காவி உடையுடன் இருந்த திருவள்ளுவர் படத்தை தனது X தளத்தில் பகிர்ந்தும் வாழ்த்து தெரிவித்திருந்தார். அவரின் பதிவில் “ இந்த திருவள்ளுவர் தினத்தில், நமது தமிழ்நாட்டின் ஆன்மிக பூமியில் பிறந்த, மதிப்பிற்குரிய கவிஞரும், சிறந்த தத்துவஞானியும், பாரதிய சனாதன பாரம்பரியத்தின் துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் ஞானம் நமது தேசத்தின் கருத்துக்களையும் அடையாளத்தையும் வடிவமைத்து, வளப்படுத்தி, ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் வழிகாட்டியாகவும், உத்வேகத்தின் ஆதாரமாக உள்ளது. இந்த புனித நாளில், அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுருந்தார்.

காவி உடை உடன் இருந்த திருவள்ளுவர் படத்துடன் ஆளுநர் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், திருவள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டிருப்பது ஆளுநருக்கு சொல்லும் பதிலாகவே பார்க்கப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios