தேனி

தேனி மாவட்டம், ஐயம்பட்டி சல்லிக்கட்டு விழாவை அரசு விழாவாக நடத்த அரசிடம் போதுமான நிதி வசதி இல்லை. அதனால், நீங்களே சல்லிக்கட்டை சிறப்பாக நடத்திக் கொள்ளுங்கள் என்று மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் தெரிவித்தார்.

ஐயம்பட்டியில் பிப்ரவரி 19-ஆம் தேதி சல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது. முன்னதாக, சல்லிக்கட்டை அரசு விழாவாக நடத்திட மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி சல்லிக்கட்டு விழா குழுவினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, சனிக்கிழமை ஐயம்பட்டியில் சல்லிக்கட்டு நடைபெறும் பகுதிகளை மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, தேனி மாவட்ட சல்லிக்கட்டுப் பேரவைத் தலைவர் அண்ணாத்துரை, ஐயம்பட்டி சல்லிக்கட்டு விழா குழுவினருடன் ஆட்சியர் அங்குள்ள சமுதாயக் கூடத்தில் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.

அதில், வாடிவாசல் அமைக்கும் பணி, காளைகள் நிறுத்தும் இடம், குடிநீர், கழிப்பறை உள்ளிட்டவை சரியான முறையில் அமைக்க வேண்டும்.

மேலும், சல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகளுக்கு கால்நடை மருத்துவர்களின் சான்றிதழ் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் ஆட்சியர் கொடுத்தார்.

பின்னர், சல்லிக்கட்டை அரசு விழாவாக நடத்துவதற்கு போதுமான நிதி வசதி இல்லை என்றும், கடந்த காலங்களில் நடத்தப்பட்டது போன்று இந்தாண்டும் சல்லிக்கட்டு விழாவை சிறப்பாக நீங்களே நடத்திக் கொள்ளுமாறும் ஆட்சியர் தெரிவித்தார்.