no electricity in palakod
பகல் சூரிய வெளிச்சம் இரவில் நிலா வெளிச்சத்தில் பல வருடமாக மின்சார வசதியில்லாமல் வாழ்ந்து வரும் மக்கள் அவல நிலை பற்றி செய்தி கிடைத்ததும் நேரில் சென்று விசாரணை செய்தோம். அப்போது தான் பல உண்மைகள் தெரிந்தது.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் பெரியாம்பட்டி காமராஜ் நகரில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு செந்தமான இடத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல தலைமுறையாக வசித்து வருகின்றனர்.

இருபது வருடத்திற்கு முன் எழுநூறு குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ளவர்களுக்கு இன்றுவரை மின்சாரம் வழங்கப்பட வில்லை. இவர்கள் தனது இடம்தான் என்பதற்கு சான்றாக வரியும் கட்டி வருகின்றனர். அனைவரிடமும் ரேசன் கார்டு முதல் ஆதார் எண் உள்ளிட்ட அனைத்து அரசு ஆதாரங்களும் வைத்துள்ளனர்.
இங்குள்ள குழந்தைகள் பகல் வெளிச்சத்தில் படித்தால் மட்டுமே படிக்க முடியும். பொழுது சாய்ந்தால் படுக்கைதான். இரவு வெளிச்சம் இல்லாமல் பல குழந்தைகள் தங்களின் படிப்பை பாதியிலேயே இருளாக்கியும் கொண்டுள்ளனர்.

கூலித்தொழில் செய்து வயிற்று பசியை தீர்த்து வரும் இப்பகுதியினர் அரசு அதிகாரி முதல் அரசியல்வாதிகள் வரை அனைவரிடமும் புகார் கொடுத்துள்ளனர். இவர்கள் கொடுத்துள்ள புகார்கள் குப்பை தொட்டியில் வீசப்பட்டதோ என்னவோ இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
இந்த தொகுதி தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகனின் சொந்த தொகுதி. இவர் பலமுறை இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராகியுள்ளார்.

ஒவ்வொரு முறையும் தான் போட்டியிடும் போதெல்லாம் மின்சார இணைப்பு தருவதாக கூறி வாக்கு கேட்கிறார். வெற்றி பெற்று அமைச்சராகி விட்டால் எங்களை திரும்பி கூட பார்பது இல்லை என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.
அமைச்சர் இப்பகுதி மக்களின் குறையை தீர்க வேண்டும் என்றால் உடனே தீர்த்து வைக்கலாம். என்னமோ தெரியவில்லை அமைச்சர் கண்டு கொள்ளாமல் உள்ளார் என்பது தான் வேதனையாக உள்ளது.
