என்.எல்.சி. கையகப்படுத்திய நிலத்தில் அறுவடை முடியும் வரை விவசாயிகளுக்கு எந்த தொந்தரவும் கொடுக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மத்திய அரசு நிறுவனமான என்.எல்.சி இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் தனது 2ஆவது சுரங்க விரிவாக்க பணிகளை துவங்கியுள்ளது. இதற்காக ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் கால்வாய் அமைக்கும் பணியை அந்நிறுவனம் கடந்த வாரம் தொடங்கியது. ஜேசிபி எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, விளைநிலங்களில் கால்வாய் அமைக்கும் பணியில் என்.எல்.சி நிர்வாகம் ஈடுபட்டது.

ஆனால், நெற்பயிர்கள் அறுவடை நடைபெற உள்ள நிலையில், விளைநிலத்தை அழிப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். என்.எல்.சி நிறுவனம் உரிய இழப்பீடு வழங்காமல் நிலம் கையகப்படுத்தும் பணியைத் தொடங்கியுள்ளதாகவும், நிலம் கையகப்படுத்தும் போது வழங்கப்பட்ட இழப்பீட்டில் ஏராளமான குளறுபடி நடந்துள்ளதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டினர். மேலும், என்.எல்.சி நிர்வாகத்திற்கு எதிராக அவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது.

இந்த நிலையில், என்.எல்.சி. கையகப்படுத்திய நிலத்தில் அறுவடை முடியும் வரை விவசாயிகளுக்கு எந்த தொந்தரவும் கொடுக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்தல் சட்டப்பிரிவு 101இன் படி நிலத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட நிலத்தின் உரிமையாளர் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து கொள்ள நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு முறையீடப்பட்டது. அதனையேற்று, பிற்பகலில் வழக்கை விசாரணைக்கு எடுத்து கொள்வதாக நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் 3 ஆண்டுகளில் காணாமல் போன பெண்கள், சிறுமிகள்13 லட்சம்; தமிழ்நாட்டில் இத்தனை பேரா? அதிர்ச்சி தகவல்!!

முன்னதாக, விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன் பிறகே நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மனிதாபிமான அடிப்படையில் இழப்பீடு வழங்கப்பட்ட பின்பும், விவசாயம் செய்ய அனுமதித்ததாகவும் அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

மேலும், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அதற்கான இழப்பீட்டையும் அதிகரித்து அறிவித்துள்ளோம். சுமார் 264 ஹெக்டேர் நிலத்திற்கு அதிகமான கருணைத்தொகை வழங்குவதற்கான அறிவிப்பையும் வழங்கியுள்ளதாக கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்திருந்தார்.