சென்னை, கோவை உள்ளிட்ட 40 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை.. என்ன காரணம் தெரியுமா?
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு தொடர்பாக தமிழகத்தில் கோவை, சென்னை உள்ளிட்ட 40 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு தொடர்பாக தமிழகத்தில் கோவை, சென்னை உள்ளிட்ட 40 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை உக்கடம் ஈஸ்வரன் கோயில் முன் கடந்த அக்டோபர் மாதம் 23ம் தேதி நிகழ்ந்த கார் வெடிப்பில், ஜமீஷா முபீன் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏ விசாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து, அவ்வப்போது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளை குறிவைத்து சென்னை, கோவை, தென்காசி உள்ளிட்ட இடங்களில் என்ஐஏ சோதனையில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, சென்னையில் கொடுங்கையூர், மண்ணடி, உள்ளிட்ட இடங்களிலும், நெல்லை மாவட்டம் கரிக்காதோப்பு பகுதியிலும், கோவையில் உக்கடம், குனியமுத்தூர் உள்பட 15 இடங்களிலும், தென்காசி அருகே அச்சன்புதூர் பகுதியில் சோதனை நடத்தப்படுகிறது.
தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, கேரளாவில் 60 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.