கோவை கார் வெடிப்பு விவகாரம்… தமிழகத்தின் 43 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை!!
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகம், கேரளா மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று 44 இடங்களில் சோதனை நடத்தினர்.
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகம், கேரளா மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று 44 இடங்களில் சோதனை நடத்தினர். கோவையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கார் சிலிண்டர் வெடித்து ஜமீஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதை அடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்தனர். மேலும் அவர்கள் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பினருக்கு (என்.ஐ.ஏ) மாற்றப்பட்டது. இதை அடுத்து வழக்கு தொடர்பான ஆவணங்களை காவல்துறையினர் தேசிய புலனாய்வு அமைப்பினரிடம் ஒப்படைத்தனர். இதை அடுத்து என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தனியார் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து… 5 பேர் உடல் கருகி உயிரிழப்பு!!
இதனிடையே கோவை கார் வெடிப்பு தொடர்பாக தமிழகத்தில் 43 இடங்களிலும், கேரள மாநிலம் பாலக்காட்டில் ஒரு இடத்திலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். காலை 5 மணி அளவில் துவங்கிய சோதனை பிற்பகல் சுமார் 3 மணி அளவில் நிறைவடைந்தது. சென்னை, கோவை, திருவள்ளூர், திருப்பூர், நீலகிரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகப்பட்டினம் ஆகிய 8 மாவட்டங்களில் 43 இடங்களிலும், கேரள மாநிலம் பாலக்காட்டில் ஒரு இடத்திலும் தேசிய புலனாய்வு முகமை சோதனையானது நடத்தப்பட்டது. இந்த சோதனையில் சந்தேகப்படும் நபர்களின் வீடுகளில் இருந்து டிஜிட்டல் சாதனங்கள், மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தமிழக எல்லைப் பகுதிகளை ஆக்கிரமிக்கும் கேரளா.! கை கட்டி வேடிக்கை பார்க்கும் திமுக அரசு- இறங்கி அடிக்கும் சீமான்
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளரான ஜமீஷா முபின், குறிப்பிட்ட மதத்தின் நம்பிக்கை சின்னங்களை சேதம் விளைவிப்பதற்காக இந்த தற்கொலை தாக்குதலை நடத்திய இருப்பதாக தெரிவித்துள்ள தேசிய புலனாய்வு அமைப்பினர், கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் , பல்வேறு பொருட்கள் மற்றும் ராசாயனம்,வேதி பொருட்களை ஆன்லைன் மூலம் வாங்கி ஜமீஷா முபீனுக்கு உதவி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இன்று கோவை உட்பட தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ள நிலையில், இந்த விசாரணையினை அடிப்படையாக கொண்டு அடுத்த கட்டமாக கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.