ngo plant trees due to vardha storm
வர்தா புயலுக்கு சாய்ந்து பலியான மரங்களுக்கு ஈடாக, கும்மிடிப்பூண்டியில் தனியார் தொழிற்சாலையின் சார்பில் ஒரே நாளில் 1000 மரக்கன்றுகள் நடப்பட்டன.
வர்தா புயலால் கும்மிடிப்பூண்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் மரங்கள் சாய்ந்து வேரோடு விழுந்தன.
இந்த நிலையில் விழுந்த மரங்களுக்கு பதில் கும்மிடிப்பூண்டியில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் வகையில், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள கே.டி.வி ஆரோக்கிய உணவு என்கிற தனியார் தொழிற்சாலை சார்பில் கும்மிடிப்பூண்டியின் பல்வேறு பகுதிகளில் மரம் நடும் விழா நடைபெற்றது.
புதுகும்மிடிப்பூண்டி, அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய இந்த விழாவிற்கு கே.டி.வி. நிறுவன நிர்வாக இயக்குநர் கே.டி.வி.நாராயணன் தலைமை தாங்கினார்.
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கோ.மா.கிருஷ்ணமூர்த்தி, வெஸ்டர்ன் தாம்சன் நிறுவன மனித வள மேலாளர் சோலை ராஜன், புதுகும்மிடிப்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பிரேமகுமாரி முன்னிலை வகித்தனர்.
பள்ளி வளாகத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டன. தொடர்ந்து தொழிற்சாலையில் இருந்து கும்மிடிப்பூண்டி புறவழிச் சாலை வரை 1,000 மரக் கன்றுகள் நடப்பட்டன.
இதில் புங்கை, வேம்பு, குலும்பர், பாதாம், அசோக மரம் ஆகியவை அடங்கும்.
அடுத்தகட்டமாக மேலும் 1,000 மரங்களை நட இருப்பதாக விழா முடிவில் பேசிய கே.டி.வி நிறுவன மனித வள மேலாளர் யுவராஜ் கூறினார்.
