திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 மாத கர்ப்பிணியான திவ்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி இறந்த துக்கத்தில் கணவர் பிரதாப் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
புதுமண தம்பதி
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்துள்ள விளாங்காடு கிராமத்தை சேர்ந்த வேலு என்பவரின் மகள் திவ்யா (19). இவருக்கும், வந்தவாசியை அடுத்த தழுதாழை கிராமத்தை சேர்ந்த செல்லப்பன் மகன் பிரதாப் (25) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. இவர் சென்னையில் தனியார் லாரி கம்பெனி மேனேஜராக பணியாற்றி வந்தார். திவ்யா 4 மாதம் கர்ப்பமாக இருந்தார்.
4 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை
இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு திவ்யா தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் யாருமில்லாத நேரத்தில் திவ்யா திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து பார்த்த போது மகள் சடலமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சியில் அழுது கதறினார்.
விஷம் குடித்த கணவர்
இந்த சம்பவம் தொடர்பாக கணவர் பிரதாப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அழுது கொண்டே சென்னையில் இருந்து அரசு பேருந்தில் ஊருக்கு கிளப்பினார். பின்னர் சாலையில் நடந்து வந்த போது மனைவி இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் விஷம் குடித்துவிட்டு கீழே மயங்கி கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பிரதாப்பை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பிரதாப் பரிதாபமாக உயிரிழந்தார்.
தீராத வயிற்று வலி
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது 4 மாதம் கர்ப்பிணியான திவ்யா தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
