தேனியில் பைபாஸ் சாலையை கடக்க முயன்றபோது, அதிவேக அரசு பேருந்து மோதியதில் 18 மாடுகள் சம்பவ இடத்திலேயே பலியாகின.
பைபாஸ் சாலையை கடக்க முயன்ற மாடுகள்
தேனி மாவட்டம் தேவாரம் அடுத்துள்ள தம்பிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுருளிசாமி. இவர் 100க்கும் மேற்பட்ட மாடுகளை தொழுவம் அமைத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு டி.கள்ளிப்பட்டி அருகே திண்டுக்கல் பைபாஸ் சாலையைக் மாடுகள் கடக்க முயன்றது.
18 மாடுகள் பலி
அப்போது தேனியில் இருந்து திண்டுக்கல் நோக்கி அசுர வேகத்தில் வந்துக்கொண்டிருந்த அரசு பேருந்து மாடுகள் மீது மோதியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே 18 மாடுகள் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தன. 20-க்கும் மேற்பட்ட மாடுகள் காயமடைந்தன. மாடுகள் மீது மோதியதால் அரசு பேருந்தின் முன்பகுதி பயங்கரமாக நொறுங்கியது.
கண்ணீர் விட்டு கதறிய சுருளிசாமி
பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு எந்த வித காயமும் ஏற்படவில்லை. பாசமாக வளர்த்த மாடுகள் தனது கண்ணெதிரே பேருந்து மோதி பலியானதை கண்டு சுருளிசாமி கண்ணீர் விட்டு கதறி அழுதார். இந்த விபத்து தொடர்பாக பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் சுருளிசாமி புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் அரசு பேருந்து ஓட்டுநர் அழகர்சாமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
