புத்தாண்டை கொண்டாட சென்னையில் ஏராளமான ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகள் இருந்தாலும் இளைய தலைமுறையினர் பெரும்பாலும், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகள், ரிசார்ட்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பொழுது போக்கு மையங்களைத்தான் அதிகமாக விரும்புகின்றனர்.

அந்த வகையில் வரும் புத்தாண்டை கொண்டாட ஏராமானோர் இங்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவின் பேரில் அடையாறு துணை கமிஷனர் செஷன்சாய், நீலாங்கரை உதவி கமிஷனர் சீனிவாசலு, சட்டம் ஒழுங்கு  இன்ஸ்பெக்டர் நடராஜன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மலைச்சாமி, எஸ்ஐ ஆனந்தராஜ் ஆகியோர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். 

குறிப்பாக திருவான்மியூரில் இருந்து முட்டுக்காடு வரை 20 இடங்களில் தடுப்புகள் அமைத்து தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. பைக்கில் ஹெல்மெட் அணியாமலும், 2 பேருக்கு மேலும் அதிவேகத்துடன் வருபவர்கள், அதிக ஒலி எழுப்பி கொண்டு வருபவர்கள், ஸ்டான்டை சாலையில் உரசவிட்டு வருபவர்களை மடக்கி எச்சரிக்கை செய்ய தயாராக உள்ளனர். 

மேலும், நள்ளிரவு 2 மணிக்கு மேல் கொண்டாட்டங்களை நடத்த கூடாது, மது விருந்து அளிக்க கூடாது. பெண்களை கிண்டல் செய்தால் உடனடி நடவடிக்கை எடுக்க போலீசார் தயராக உள்ளனர். மது அருந்து விட்டு கார், பைக் ஓட்டுபவர்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிப்பதோடு, வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும். வாகனங்களை மடக்கி புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்போர் கண்ணியத்துடனும், நாகரிகமாகவும் நடந்து கொள்ள வேண்டும். அத்துமீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் போலீசார் தயாராகி வருகின்றனர். 

கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், பனையூர், கானத்தூர் உள்ளிட்ட கடற்கரைக்கு ஏராளமானோர் செல்வார்கள். அவர்களில் பலர் கடலில் இறங்கி குளிப்பார்கள் என்பதாலும், அதை தடுக்க சவுக்கு தடுப்புகள் அமைக்கப்பட உள்ளது. கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. கோயில்களிலும் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். மொத்தத்தில் அமைதியுடனும் பாதுகாப்புடனும் புத்தாண்டை கொண்டாட பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.