கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்த மனைவி வர்ஷாவை, கணவர் சக்திவேல் கத்தியால் வெட்டியுள்ளார். பின்னர், நள்ளிரவில் மாமியார் வீட்டின் மீது இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பினார். 

சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் சக்திவேல் (31). இவர் மதுரவாயலை சேர்ந்த வர்ஷா (26) என்பவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து கடந்த 10 மாதங்களாக கணவரை பிரிந்து மதுரவாயலில் உள்ள தனது தாய் வீட்டில் வர்ஷா வசித்து வந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மனைவியை சமாதானம் செய்ய சக்திவேல் மாமியார் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல், வர்ஷாவை கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்தார். சிறிய காயம் என்பதால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை.

இதனிடையே நேற்று நள்ளிரவு நண்பருடன் இருசக்கர வாகனத்தில் வந்த சக்திவேல், திடீரென மறைத்து வைத்திருந்த ஒரு வெடிகுண்டை வர்ஷா வீடு முன்பு வீசியுள்ளார். இதில் வர்ஷாவின் சித்தப்பா ரமேஷ் நூலிழையில் உயிர் தப்பினார். மற்றொரு நாட்டு வெடிகுண்டை வீடு மீது வீசிவிட்டு சென்றார். அடுத்தடுத்து இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்ததால் அக்கம் பக்கத்தினர் அலறி கூச்சலிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பிய சக்திவேல் மற்றும் அவரது நண்பர் சத்தீஷ் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். பிரிந்து சென்ற மனைவி வீடு மீது நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.