சென்னையில் பார்க்க வேண்டிய டாப் 10 இடங்கள்.. என்னென்ன தெரியுமா?
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் கட்டாயம் பார்க்க வேண்டிய 10 சுற்றுலா தலங்கள் இந்த கட்டுரையில் பட்டியலிடப்பட்டுள்ளன. மெரினா பீச், கபாலீஸ்வரர் கோயில் முதல் மகாபலிபுரம் மற்றும் வேடந்தாங்கல் வரை, ஒவ்வொரு இடத்தின் சிறப்புகளும் விளக்கப்பட்டுள்ளன.

சென்னையில் பார்க்க வேண்டிய 10 இடங்கள்
தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை பல்வேறு வரலாற்று சிறப்புக்களை கொண்டுள்ளது. அதுமட்டுமல்ல வந்தாரை வாழ வைக்கும் சென்னை என்றும் அழைக்கப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் சுற்றி பல சுற்றுலா தலங்கள் உள்ளன. அந்த வகையில் சென்னையில் கட்டாயம் பார்க்க வேண்டிய 10 சுற்றுலா தலங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
மெரினா பீச்
சென்னைக்கு சுற்றுலா வருபவர்களின் பட்டியலில் முதலிடத்தில் எப்போதும் இருப்பது மெரினா பீச். உலகின் மிக நீளமான பீச்களில் ஒன்றாக இருக்கும். குறிப்பாக அழகான மாலைப் பொழுதை கழிப்பதில் உள்ளூர் மக்களின் முதல் தேர்வு மெரினா கடற்கரை. தினமும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். அதுமட்டுமல்ல இங்கு கிடைக்கும் பல கடல் உணவுகளை நீங்கள் ருசித்து சாப்பிடலாம்.
கபாலீஸ்வரர் கோயில்
மயிலாப்பூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற கபாலீஸ்வரர் கோயில். இக்கோவில் நீங்கள் பார்க்க வேண்டிய முக்கிய இடங்களில் ஒன்றாகும். சென்னையின் உயரிய ஆன்மீக பாரம்பரியத்திற்கு உதாரணமாக திகழும் இந்தக் கோயிலில் மூலக் கடவுளாக சிவபெருமான் மக்களுக்கு அருள்பாலிக்கிறார்.
கிண்டி தேசிய பூங்கா
இந்தியாவின் 8வது சிறிய தேசிய பூங்காவான கிண்டி தேசிய பூங்கா நகரின் எல்லைக்குள் அமைந்துள்ளது. இங்கு மான், குரங்குகள், பல வகையான பறவைகள், தாவரங்கள் ஆகியவற்றை கண்டு ரசிக்கலாம். இதன் உள்ளேயே குழந்தைகளுக்கான பூங்காவும் பாம்பு பண்ணையும் உள்ளது.
மகாபலிபுரம்
பழங்கால பாறைக் கோயில்கள் மற்றும் பிரமிக்க வைக்கும் கடலோர காட்சிகளுக்கு பெயர் பெற்ற மகாபலிபுரம் யுனெஸ்கோ. இது உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாகும். ஒரே கல்லில் செதுக்கப்பட்டபாறைச் சிற்பங்களும் உள்ளது. கடற்கரைக் கோயில், அர்ஜுனனின் தவம் மற்றும் பஞ்ச ரதங்களை நீங்கள் குடும்பத்தோடு கண்டு மகிழலாம். சென்னையிலிருந்து 52 கி.மீ தொலைவில் உள்ளது.
அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா
அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா என்றழைக்கப்படும் இது சென்னை வண்டலூரில் அமைந்துள்ளது. இது நகரத்தின் மையப்பகுதியில் இருந்து ஒரு குறுகிய பயண தூரத்தில் அமைந்துள்ளது. 1,490 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த உயிரியல் பூங்கா ஏராளமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் வாழ்விடமாகும். இந்த பூங்காவில் பல்வேறு வகையான பாலூட்டிகள், ஊர்வன, சிங்கம், புலி மற்றும் பறவையினங்களைபார்க்க முடியும். சென்னையில் காண வேண்டிய ஒரு சிறந்த இடமாக இருக்கும் இது குழந்தைகளோடு வரும் குடும்பத்தினருக்கு மிக உகந்த சுற்றுலா இடமாக இருக்கும்.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்
சென்னையில் இருந்து சுமார் 85 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். இந்தியாவின் பழமையான பறவைகள் சரணாலயங்களில் ஒன்று ஆகும். பல்வேறு பறவை இனங்களை பார்ப்பது, இயற்கை சூழலை அமைதியாக ரசிப்பது என உங்கள் பயணத்தை மேற்கொள்ளலாம்.
விவேகானந்தர் இல்லம் மற்றும் அருங்காட்சியகம்
மெரினா பீச்சின் எதிர்புறமாக அமைந்துள்ளது விவேகானந்தர் இல்லம். 1897-ம் ஆண்டு விவேகானந்தர் சென்னைக்கு வந்திருந்தபோது இங்குதான் தங்கியுள்ளார். இங்குள்ள அருங்காட்சியகத்தில் அவருடைய வாழ்க்கை குறிப்புகளும் அவருடைய போதனைகளும் புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் கலைப்பொருட்களாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
எலியட்ஸ் கடற்கரை
பெசன்ட் நகரில் உள்ள பாரம்பரிய கலைநயத்தோடு கூடிய எலியட்ஸ் கடற்கரை, நகரத்தின் மையத்திலிருந்து சற்று தொலைவில் உள்ள ஒரு விசித்திரமான கடற்கரையாகும். இந்த கடற்கரை மெரினா கடற்கரையில் இருந்து முற்றிலும் வேறுபட்டது.
நாகலாபுரம்
நாகலாபுரம் சென்னையில் இருந்து 74 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இயற்கை காட்சிகளை கண்டுகளிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நல்ல சாய்ஸ் ஆக இருக்கும். மலையேற்றம் மற்றும் அருவிகளை பார்ப்பதற்கு நல்ல இடமாகும்.
புலிகாட் பறவைகள் சரணாலயம்
புலிகாட் ஏரி பறவை ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கு ஏற்றதாகும். புலிகாட் பறவைகள் சரணாலயம், டச்சு கல்லறை ஆகியவற்றை நீங்கள் பார்வையிடலாம் மற்றும் புலிகாட் தீவுக்கு படகு சவாரி செய்து மகிழலாம். தூரத்தை பொறுத்தவரை சென்னையில் இருந்து 104 கி.மீ ஆகும்.

