பிரதமர் மோடி ஆதார் தகவல்களை தனியாருக்கு விற்பதாக வரும் செய்திகள் பொய்யானவை எனவும் ஆதார் மூலம் சேகரிக்கப்படும் பொதுமக்களின் பயோ மெட்ரிக் தகவல்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் மத்திய அமைச்சர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில், அரசின் நலத்திட்ட சலுகைகளைப் பெற குடிமக்களுக்கு ஆதார் அவசியம் என மத்திய அரசு வலியுறுத்துகிறது. மேலும் ஆதார் எண்ணை பான் எண், மொபைல் எண், வங்கிக்கணக்கு என அனைத்துடனும் இணைக்குமாறு மத்திய அரசு கட்டாயப்படுத்தி வருகிறது.

ஆதாரை கட்டாயமாக்குவது தனிநபர் உரிமையை பறிக்கும் செயல் என்ற வாதம் எழுந்ததால், அரசமைப்பு சட்டத்தின்படி ஆதார் அட்டை திட்டம் சரியானதுதானா? என்பது தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. 

இதற்கிடையே ஆதார் குறித்த தகவல்கள் முறையாக பாதுகாக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துவருகிறது. 

ஆதார் தகவல்கள் திருடப்படுவதாகவும், 500 ரூபாய் கொடுத்தால் பல பேருடைய ஆதார் தகவல்களை தனியார் ஏஜென்சிகள்தருவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. 

இந்நிலையில், மத்திய அமைச்சர் அல்போன்ஸ் திருவனந்தபுரத்தில் செய்தியார்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆதார் தகவல்களை தனியாருக்கு விற்பதாக பொய்யான செய்திகள் வருவதாகவும், அவற்றை நம்ப வேண்டாம் என்றும் கூறினார். மேலும், ஆதார் மூலம் சேகரிக்கப்படும் பொதுமக்களின் பயோ மெட்ரிக் தகவல்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவித்தார்.