சேலம்:

மத்திய அரசின் பணப்பரிமாற்றத்தில் கூறப்பட்டுள்ள அதிரடி முடிவுகள், இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு வித்தாகுமா? அல்லது மக்களிடையே அதிருப்தி ஏற்படுத்தும் அலர்ஜியாக இருக்குமா என்பது பற்றிய மக்களின் பார்வை இதோ…

இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ் சேலம் பொதுச் செயலாளர் மோகன் கூறியதாவது:

“பிரதமர் மோடியின் அறிவிப்பை, நாட்டின் பொருளாதார நலன் கருதி வரவேற்கிறோம். இந்த அறிவிப்பு, அரசியல்வாதிகளுக்கும், பெரும் வணிக முதலைகளுக்கும் பேரிடியாக அமைவது உறுதி. கள்ள நோட்டு, கறுப்பு பணப் புழக்கத்துக்கு முடிவு கட்டும்.

ஆனால், அதே நேரத்தில், எளிய மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

இன்றைய கால கட்டத்தில், தினக்கூலி கூட சராசரியாக, 500 ரூபாயாக உள்ள நிலையில், காலையில் பால் உள்ளிட்ட அத்தியாவாசிய பொருட்களை வாங்குவதில் இருந்து, இரவு சாப்பிட உணவகம் செல்லும் வரை இயல்பு நிலையில் இருந்து விலகியே இருக்கும். என்று அவர் தெரிவித்தார்.

“மத்திய அரசின் இந்த அறிவிப்பால், ஓட்டுநர்கள், கிளீனர்கள் உட்பட இந்த தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் பெரும் சிரமத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வெளி மாநிலங்களுக்கு சரக்குகளை ஏற்றிச் சென்றுள்ள ஆயிரக்கணக்கான லாரி டிரைவர்களின் நலனில் பாதிப்பு ஏற்படாத வண்ணம், மத்திய அரசு, அந்தந்த மாநில அரசுகள் மூலம் உதவ வேண்டும்.

இதேபோல், மோட்டார் தொழிலில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு, பணப் பரிமாற்றத்தில் உள்ள சிரமங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தமிழ்நாடு செயலாளர் தனராஜ்: கூறினார்.

சேலம் மாவட்ட தங்க நகை கடை உரிமையாளர்கள் சங்க தலைவர் மாணிக்கம் கூறியது: “மத்திய அரசின் முடிவால், தங்கம் நகை விற்பனை பணப் புழக்கத்தில் சிரமத்தை சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். நகை விற்பனையில், 500, 1,000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்களிடம் வாங்குவது குறித்தும், நகை விற்பனை குறித்தும் இன்று காலையில், சங்க உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சேலம் பொதுஜனம் செந்தில்: “மத்திய அரசின் இந்த அறிவிப்பு, சாமானிய சிறு வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தக் கூடியது. அன்றாட அத்தியவாசிய பொருட்களை வாங்குவதில் கூட, சிரமத்தை சந்திக்க வேண்டிய உள்ளது. மத்திய அரசு தற்போது அறிவித்துள்ள இந்த திட்டத்தை, பொதுமக்களின் நலன் பாதிக்காத வகையில், அமல்படுத்தி இருக்க வேண்டும்.