தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெற்று புயலாக மாறும் என்பது குறித்து வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி நடைபெற்று வருகிறது. இநிநலையில் கடந்த மாதம் உருவான கஜா புயல் டெல்டா மாவட்டங்களை புரட்டி எடுத்தது. தற்போது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி  வலுப்பெற்று வருகிற 12-ம் தேதி புயலாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் 13-ந்தேதி தீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திரா மற்றும் வட தமிழக கடற்கரை நோக்கி நகரும் என்றும், 16-ம் தேதி மதியம் சென்னைக்கும்-விசாகப்பட்டினத்துக்கும் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புயல் உருவாகும் பட்சத்தில் தாய்லாந்து நாடு பேய்ட்டி என்று பெயர் சூட்டியுள்ளது.  

இதுதொடர்பாக பாலசந்திரன் கூறுகையில்;- இந்திய பெருங்கடலை ஓட்டி உள்ள தென்கிழக்கு வங்கக் கடல் மத்திய பகுதியில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதன் பின்னரே, அது புயலாக மாறுமா? என்பது தான் தெரிய வரும் என்றார். தற்போதைய சூழ்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் இயக்குநர் தெரிவித்தார்.