நீட் தேர்வில் இருந்து தமிழகத்தில் விலக்கு அளிப்பதற்கானஅவசர சட்ட  முன்வடிவின் நகலை தமிழக அரசு  மத்திய அரசுக்கு நேற்று அனுப்பி வைத்துள்ளது.

தமிழகத்தில் மருத்துவப் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வில் இருந்து  விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.

இதற்காக விஜயபாஸ்கர் உள்பட தமிழக அமைச்சர்கள் குழு டெல்லிக்குச் சென்று பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து , நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்நிலையில் அமைச்சர் விஜய பாஸ்கர்  நேற்று முன்தினம் டெல்லிக்குச் சென்று அங்கு முகாமிட்டு, மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்  ஜே.பி.நட்டாவை ஒரே நாளில் மூன்று முறை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். பிரதமரின் அலுவலகத்திற்கான இணை அமைச்சர்  ஜிதேந்திர சிங்-கையும் சந்தித்துப் பேசினார்.

இந்த நிலையில், நேற்று  டெல்லி அக்பர் சாலையில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங்கின் வீட்டுக்கு  நாடாளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் சென்று சந்தித்தனர். அப்போது, தமிழகத்திற்கு ‘நீட்’ தேர்விலிருந்து விலக்களிப்பது தொடர்பாக மீண்டும் கோரிக்கை வைத்தனர்.

இதற்கிடையே நீட் தேர்வில் இருந்து தமிழகத்தில் விலக்கு அளிப்பதற்கான அவசர சட்டத்தை இயற்றி மத்திய அரசுக்கு அனுப்ப தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி அவசர சட்டத்திற்கான நகல் மத்திய அரசுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.

பிரதமர்  மோடி சாதகமான முடிவு எடுக்கும் நிலையில்  நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பதற்கான அவசர சட்டத்திற்கு ஒப்புதல் கிடைக்கும் என தெரிகிறது.