40 சீட் ஜெயிச்சாச்சு! அப்புறம் எதுக்கு வேடிக்கை! நீட் தேர்வை ரத்து செய்ற வேலைய பாருங்க! சீறும் சீமான்!
கடந்த ஆட்சிக்காலங்களில் மக்களாட்சி முறையினையே முற்று முழுதாக அழித்தொழிக்க முயன்ற அரசியல் பிழைகளாலும், மக்களை வாட்டி வதைத்த அதிகார கொடுமைகளாலும், தற்போது அறுதிப்பெரும்பான்மையைப் பெற முடியாமல் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள மோடி தலைமையிலான பாஜக அரசு, இனியேனும் தமது தவறுகளைத் திருத்திக்கொள்ள முயல வேண்டும்.
நடப்பாண்டு நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாளில் பல்வேறு குளறுபடிகள் இருந்ததுடன், அதற்காக வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களிலும் மிகப்பெரிய மோசடி நடைபெற்றுள்ளதும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என சீமான் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்: இந்தியா முழுமைக்கும் நடப்பாண்டிற்கான நீட் தேர்வில் மிகப்பெரிய குளறுபடிகள் நடைபெற்ற நிலையில், நீட் தேர்வெழுதிய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களிலும் பெரும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தகுதித் தேர்வு என்ற பெயரில் ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைத்து அழிக்கும் கொடிய நீட் தேர்வினைத் தொடக்கம் முதலே நாம் தமிழர் கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது. நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வலியுறுத்தி பல்வேறு மக்கள் திரள் போராட்டங்களையும் முன்னெடுத்தது. ஆனால், நீட் தேர்வினால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இந்தியா முழுவதும் மாணவ-மாணவியர் பலர் தங்கள் இன்னுயிரை இழந்த பின்னும் நீட் தேர்வினை ரத்து செய்ய இந்திய ஒன்றிய அரசு மறுத்து வருவது கொடுங்கோன்மையாகும்.
இதையும் படிங்க: இந்த 6 தொகுதிகளில் 3வது இடம்! 12 தொகுதிகளில் 1 லட்சம் வாக்குகள்! தமிழக அரசியல் அரங்கை அதிரவிடும் சீமான்!
சோதனை என்ற பெயரில் நீட் தேர்வெழுதும் மாணவ மாணவியரின் உள்ளாடைகளைக் கழட்டி, தேர்வெழுத முடியாத அளவிற்கு கடும் பதற்றத்திற்கு ஆளாக்கியது முதல், தேர்வு மையங்களில் ஆள் மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகளில் மாணவர்கள் ஈடுபடுவது அம்பலமானது வரை நீட் தேர்வு தகுதியுடைய மருத்துவ மாணவர்களை உருவாக்குமென்பது பச்சைப்பொய் என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதன் உச்சமாக, நடப்பாண்டு நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாளில் பல்வேறு குளறுபடிகள் இருந்ததுடன், அதற்காக வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களிலும் மிகப்பெரிய மோசடி நடைபெற்றுள்ளதும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நீட் தேர்வு முடிவுகளை அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்னதாக அவசர அவசரமாக வெளியிட்டதும், தேர்வில் முதலிடங்களைப் பிடித்த மாணவர்களின் வரிசை எண்கள் அடுத்தடுத்து உள்ளதும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது குறித்த ஐயத்தை அதிகரிக்கவே செய்கிறது. தொடர்ச்சியாக நடைபெறும் இம்முறைகேடுகள் அனைத்தும் நீட் தேர்வு முறையே தேவையற்ற ஒன்று என்பதையே மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
கடந்த ஆட்சிக்காலங்களில் மக்களாட்சி முறையினையே முற்று முழுதாக அழித்தொழிக்க முயன்ற அரசியல் பிழைகளாலும், மக்களை வாட்டி வதைத்த அதிகார கொடுமைகளாலும், தற்போது அறுதிப்பெரும்பான்மையைப் பெற முடியாமல் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள மோடி தலைமையிலான பாஜக அரசு, இனியேனும் தமது தவறுகளைத் திருத்திக்கொள்ள முயல வேண்டும். அதன் தொடக்கமாக ஏழை மாணவச்செல்வங்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் முறைகேடுகள் நிறைந்த கொடும் நீட் தேர்வு முறையையே நிரந்தரமாக ரத்து செய்ய முன்வர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
இதையும் படிங்க: NEET: நீட் எனும் பிணியை அழித்தொழிக்க கரம்கோப்போம்.!!நீட்டை ஒழித்துக்கட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை- ஸ்டாலின்
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்வோம் என்று வாக்குறுதியளித்த திமுக, நடந்து முடிந்த தேர்தலில் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை வென்றுள்ளதன் மூலம் நாடாளுமன்றத்தில் தமக்குள்ள பலத்தைப் பயன்படுத்தி, நீட் தேர்வை ரத்து செய்ய இனியாவது ஆக்கப்பூர்வ முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன் என சீமான் கூறியுள்ளார்.