அஸ்திரத்தை கையில் எடுத்த முதல்வர் மு.க ஸ்டாலின் - நீட் விலக்கு மசோதா தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தொடர்பான மசோதாவுக்கு, விரைவில் ஒப்புதல் அளிக்க கோரி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

NEET Bill should be approved soon: TN Chief Minister M.K.Stalin letter to the President

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (NEET) தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்த்து வருவதாகவும், நீட் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலான மருத்துவச் சேர்க்கை, நகர்ப்புற மாணவர்களுக்கும், அதிக கட்டணம் செலுத்தி பயிற்சி பெறக்கூடிய மாணவர்களுக்குமே சாதகமாக உள்ளது என்றும், அடிப்படையிலேயே ஏழை எளிய மாணவர்களுக்கு எதிரானதாக இந்தத் தேர்வு முறை உள்ளது என்றும் தெரிவித்துள்ளார் மாண்புமிகு முதலமைச்சர்.

நீட் போன்ற நுழைவுத் தேர்வின் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுவதை விட, பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெற வேண்டுமென்றும், நுழைவுத் தேர்வு முறை மாணவர்களுக்குத் தேவையற்ற கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்பது தமிழ்நாட்டின் கருத்தாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.  நீட் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை செயல்முறை, ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு நீட் தேர்வினால் ஏற்படும் பாதகமான விளைவுகள் ஆகியவை குறித்து ஆராய்ந்திட, உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் திரு. ஏ.கே. ராஜன் அவர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அக்குழு விரிவான ஆய்வை மேற்கொண்டு, தீர்வுகள் குறித்த தனது பரிந்துரைகளைச் சமர்ப்பித்தது.

இந்தக் குழுவின் அறிக்கை மற்றும் பல்வேறு விவாதங்களின் அடிப்படையில், தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்டமுன்வடிவு, 2021' (சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 43/2021), தமிழ்நாடு சட்டமன்றத்தில் 13-9-2021 அன்று நிறைவேற்றப்பட்டு, 18-9-2021 அன்று மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு ஆளுநரால் ஐந்து மாத காலத்திற்குப் பிறகு இச்சட்டமுன்வடிவு திருப்பி அனுப்பப்பட்டதாகவும், 8-2-2022 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் மீண்டும் இச்சட்டமுன்வடிவு அறிமுகப்படுத்தப்பட்டு, மறுபரிசீலனைக்குப் பிறகு மீண்டும் நிறைவேற்றப்பட்டு, மாண்புமிகு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவதற்கு ஏதுவாக மாண்புமிகு ஆளுநருக்கு மீண்டும் அனுப்பப்பட்டது.

Recharge Plan : ஒரே ரீசார்ஜ்.. 180 நாட்கள் வேலிடிட்டி.. இவ்வளவு கம்மி விலைக்கா? முழு விபரம் இதோ !!

மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், இந்த மசோதாவை ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி, தற்போது நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவு தொடர்பாக, ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் 21-6-2022 அன்று கோரியிருந்த விளக்கங்கள், ஒன்றிய உயர்கல்வி அமைச்சகம் 26.08.2022, 15.05.2023 ஆகிய தேதிகளில் கோரியிருந்த விளக்கங்கள், ஒன்றிய ஆயுஷ் அமைச்சகம் 13.01.2023 அன்று கோரியிருந்த விளக்கங்கள், ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் மூலம் பெறப்பட்டதாகத் தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், ஒன்றிய அமைச்சகங்கள் கோரியிருந்த அனைத்து விவரங்களையும் தமிழ்நாடு அரசு விரைவாக வழங்கியதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.  

ஆனால், தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவிற்கு இதுவரை ஒப்புதல் அளிக்கப்படாததால், நீட் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை முறையைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும், இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் மனதில் மிகுந்த கவலையையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும், நீட் தேர்வின் மூலம் சேர்க்கை கிடைக்காத விரக்தியில் மாணவர்களும், சில நிகழ்வுகளில் அவர்களது பெற்றோர்களும் தற்கொலை செய்து கொள்ளும் பல்வேறு சோகமான சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கவலைபடத் தெரிவித்துள்ளார்.  

அண்மையில்கூட, நீட் தேர்வில் தோல்வியடைந்த மன உளைச்சலில், சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் ஒருவரும், அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்டனர் என்றும், தமிழ்நாட்டில் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து, பிளஸ் 2 மதிப்பெண்கள் மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்திருந்தால், இதுபோன்ற சோக நிகழ்வுகளை நிச்சயம் தவிர்த்திருக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.  

தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு மசோதா, தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த கருத்தின் பிரதிபலிப்பு என்றும், அதனைச் செயல்படுத்துவதில் ஏற்படும் ஒவ்வொரு நாள் தாமதமும், தகுதியான மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கை கிடைப்பதில் பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு மட்டுமல்ல, சமுதாயத்தில் விலைமதிப்பற்ற மனித உயிரிழப்புகள் ஏற்படுவதற்குக் காரணமாக அமைகிறது என்று தெரிவித்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இந்த விவகாரத்தில் மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்கள் உடனடியாகத் தலையிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட நீட் தொடர்பான மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

500 ரூபாய் நோட்டு வைத்திருப்போர் எச்சரிக்கை.. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு - முழு விபரம் இதோ !!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios