நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மாணவி அனிதா தற்கொலைக்கு நீதி விசாரணை வேண்டும் என்றும், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த போராட்டங்களில் மாணவர்கள், மாணவ அமைப்புகள், கட்சியினர், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்துபவர்கள், சாலை மறியல், ரயில் மறியல், கோயில் கோபுரம் மீதேறி ஆர்ப்பாட்டம், வகுப்பு புறக்கணிப்பு என பல்வேறு வகைகளில் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ஜி.கே. மணி என்பவர் நீட் தேர்வு தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. 

மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் நடத்த தடை விதித்தனர். அரசியல் கட்சி, மாணவர்கள், தனி நபர் என யாராக இருந்தாலும் போராட்டம் நடத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வகுப்பு புறக்கணிப்பு, சாலை மறியல் போன்ற போராட்டங்கள் நடத்தவும் உச்சநீதிமன்றம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது, கடையடைப்பு நடத்துவது, சாலை மறியலில் ஈடுபடுவது ஆகியவைகளில் ஈடுபடக் கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 
சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க எவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அப்படி இல்லை என்றால் அரசுக்கு எதிரான செயல்பாடு இருக்கும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு குறித்து விளக்கம் அளிக்க தலைமை செயலர், முதன்மை செயலர் ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.