திண்டுக்கல்

நோய் தொற்று இல்லாத கிராமங்கள், நகரங்கள் கொண்ட நாடு உருவாக வேண்டும் என்று மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் பி.பி.செல்லத்துரை தெரிவித்தார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 31-வது இளைஞர் விழா, திண்டுக்கல் மாவட்டம், ஜிடிஎன் கல்லூரியில் தொடங்கியது. 

"தூய்மையும், பசுமையும் நிறைந்த பூமியை நமது இளைஞர்கள் உருவாக்கட்டும்' என்ற கருப்பொருளில் இந்த விழா நடைப்பெற்றது. இந்த விழாவில், காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட 31 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். 

பல்கலைக்கழக பதிவாளர் வெ.சின்னையா போட்டிகளை தொடங்கி வைத்தார். நாட்டுப்புறக் கலைகள்,  வில்லுப்பாட்டு, கட்டுரை உள்பட 51 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. 

இந்தப் போட்டியின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு காமராஜர் பல்கலை. துணைவேந்தர் பி.பி.செல்லத்துரை தலைமை தாங்கினார். 51 பிரிவுகளில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

ஒட்டுமொத்த பங்களிப்பில், சிவகாசி ஐயநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி முதலிடம் பிடித்தது. விருதுநகர் விவிவி கல்லூரி 2-ஆம் இடம் பிடித்தது. 

வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு துணைவேந்தர் செல்லத்துரை கேடயங்களை வழங்கினார். கலாசார அணி வகுப்பில் முதல் 10 இடங்களை பிடித்த கல்லூரிகளுக்கும் கேடயங்கள் வழங்கப்பட்டன.
 
பின்னர், துணைவேந்தர் செல்லத்துரை பேசியது:  "நோய் தொற்று இல்லாத கிராமங்கள், நகரங்கள் கொண்ட நாடு உருவாக வேண்டும். அதேபோல் பசுமையான வீடுகள் உருவாக வேண்டியதும் அவசியம். 

இன்றைய சூழலில் அறிய செயலாக இருந்தாலும், இவற்றை சாதிக்கும் திறன் இளைஞர்களுக்கு உள்ளது.  இளைஞர் சமுதாயத்துக்கு சிறந்த வழிகாட்டியாக ஆசிரியர்கள் திகழ வேண்டும்" என்று அவர் பேசினார். 

இந்த நிகழ்ச்சியில் காமராஜர் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் ம.லெல்லீஸ் திவாகர், பெ.ராஜ்குமார், ஜிடிஎன் கல்லூரி முதன்மை செயல் அலுவலர் க.ரெத்தினம், கல்வி இயக்குநர் நா.மார்க்கண்டேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.