Asianet News TamilAsianet News Tamil

எனது மகள்களே எனது பெருமை..தேசிய பெண்குழந்தைகள் தினம்..மத்திய அமைச்சர் ட்வீட்..

சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு சம உரிமை, சம வாய்ப்பு அளிப்பதை உறுதி செய்யும் பொருட்டு, 2008-ம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ந் தேதி முதல் ‘தேசிய பெண் குழந்தைகள் தினம்’ கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தனது மூன்று பெண் குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

National Girl Child Day
Author
Tamilnádu, First Published Jan 24, 2022, 6:07 PM IST

பெண் குழந்தைகளின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் கொண்டாடப்படும் இந்நாள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் கொண்டுவரப்பட்டு, இந்தியா முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, அவர்களுக்கு நேரும் பிரச்சினைகளைத் தடுப்பது, பெண் குழந்தைகளுக்கான கல்வியை உறுதி செய்வது ஆகியவை இந்நாளின் நோக்கமாகும்.

இந்திய சமுதாயத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகள், பெண் குழந்தைகளின் உரிமைகள், பெண் கல்வி, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிப்பதன் அவசியம்  குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே பரப்புவதே தேசிய பெண் குழந்தைகள் தினத்தின் குறிக்கோளாக உள்ளது.

ஆண்டுதோறும், ஒரு புதிய கருப்பொருளின் அடிப்படையில், பெண் குழந்தைகளுக்கான தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான கருப்பொருள் அறிவிக்கப்படவில்லை. 2019ஆம் ஆண்டில், 'ஒளிமயமான நாளைக்காக பெண்களை மேம்படுத்துதல்' என்றும், 2020 இல் ‘எனது குரல், எங்கள் பொதுவான எதிர்காலம்’என்றும், 2021 இல், ‘டிஜிட்டல் தலைமுறை, எங்கள் தலைமுறை’ என்பதும் தேசிய பெண் குழந்தைகள் தினத்திற்கான கருப்பொருளாக  இருந்தது.

தேசிய பெண்கள் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தேசிய பெண் குழந்தைகள் தின வாழ்த்துக்களைப் பதிவிட்டுள்ளனர். பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், தேசிய பெண் குழந்தைகள் தினம் என்பது நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதற்கும், பெண் குழந்தைகளை மேம்படுத்துவதற்கான தற்போதைய முயற்சிகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் ஒரு சந்தர்ப்பமாகும். பல்வேறு துறைகளில் பெண் குழந்தைகளின் முன்மாதிரியான சாதனைகளை கொண்டாடும் நாளாகவும் இது உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தனது மூன்று பெண் குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் எனது மகள்களே எனது பெருமை என்று குறிப்பிட்டு, எனது அருமை மகள்களுக்கு நல்ல ஒரு தந்தையாக இருந்து பெருமை சேர்த்ததற்காக ஒவ்வொரு நாளும் ஆசிர்வாதங்களை பெறுகிறேன் என்று பதிவிட்டுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios