Asianet News TamilAsianet News Tamil

கலைஞர் உரிமை தொகை: தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ்!

கலைஞர் உரிமை தொகை தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

National Adi Dravidar Commission Notice to TN govt over kalaignar women cash
Author
First Published Jul 31, 2023, 2:19 PM IST | Last Updated Jul 31, 2023, 2:19 PM IST

சென்னை செனாய் நகரைச் சேர்ந்த இந்திய குடியரசு கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அன்புவேந்தன் என்பவர், கலைஞர் உரிமை தொகை தொடர்பாக புகார் தெரிவித்து தேசிய ஆதிதிராவிட ஆணையத்துக்கு கடந்த 27ஆம் தேதி கடிதம் எழுதியுள்ளார்.

அதன்படி, அந்த புகாருக்கு விளக்கம் கேட்டு தமிழ்நாடு அரசுக்கு தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், ஆதி திராவிடர் நலத்துறைக்கான சிறப்பு நிதியை, மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்திற்கு மாற்றப்பட்டதா என்பது குறித்து 15 நாட்களுக்குள் பதில் அளிக்க  உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமைச்செயலர், ஆளுநரின் செயலர் ஆகியோருக்கு ஆணையத்தின் இயக்குநர் எஸ்.ரவிவர்மன் அனுப்பியுள்ள நோட்டீஸில் கூறியிருப்பதாவது: “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக ஆதிதிராவிடர் சிறப்பு உட்கூறு நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதாக அன்புச்செல்வனிடம் இருந்து புகார் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த புகார் தொடர்பாக, அரசியலமைப்புச் சட்டத்தின் 338ஆவது பிரிவு வழங்கியுள்ள அதிகாரத்தின்படி ஆணையம் விசாரணை நடத்த முடிவெடுத்துள்ளது. எனவே, இந்த புகார் மீதான நடவடிக்கை, உண்மை நிலை மற்றும் தகவல்களை 15 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் தங்களிடம் இருந்து எந்தப் பதிலையும் பெறாத பட்சத்தில், ஆணையத்தின் முன் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்படும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திராவிடம் என்ற சொல்லைக் கேட்டாலே ஆளுநர் ரவிக்கு எரிகிறது.! சதியாலோசனை மண்டபமாக கிண்டி ராஜ்பவன்-தங்கம் தென்னரசு

குடும்பத் தலைவிகளுக்கு மாதாந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. அதன்படி, பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார். இதற்கான முதற்கட்ட நிதியும் விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்துக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பலன்களை பெற ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். விண்ணப்ப பதிவுக்கான சிறப்பு முகாம்கள் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகின்றன.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios