natarajan liver transplant controversy

கவலைக்கிடமாக இருந்த சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை கிளினேஜல்ஸ் குளோபல் மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருந்த நடராஜனுக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. நடராஜனின் உறவினர் ஒருவரின் உறுப்புகளை நடராஜனுக்கு மாற்றி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் உண்மை அது அல்ல... மூளைச்சாவு அடைந்த 19 வயதே ஆன ஏழை இளைஞர் ஒருவரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் அபகரிக்கப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கூத்தாடிவயல் என்ற கிராமத்தைச் சேர்ந்த கார்த்தைக் என்ற 19 வயது இளைஞர், தினசரி கூலித் தொழிலாளி. விபத்தில் தலையில் பலத்த காயத்துடன் கடந்த மாதம் 30-ம் தேதி, அதாவது சனிக்கிழமை தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், திங்கட்கிழமை இரவு கார்த்திக்கை தஞ்சாவூர் அரசு மருத்துவமனையிலிருந்து வெளியேற்றி சென்னை கிளனேஜல்ஸ் குளோபல்(நடராஜன் அனுமதிக்கப்பட்டுள்ள) மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். கார்த்திக்கிற்கு தொடர்ந்து சிகிச்சை அளித்துவந்ததால் அவரை சென்னைக்கு அழைத்து செல்ல வேண்டாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

ஆனால் மருத்துவர்களின் அறிவுரையை மீறி கார்த்திக்கை சென்னை குளோபல் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். தஞ்சையிலிருந்து கார்த்திக் திருச்சி கொண்டு செல்லப்பட்டுள்ளார். கோயம்பத்தூர் கங்கா மருத்துவமனையிலிருந்து ஹெலி ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு கார்த்திக்கை திருச்சியில் இருந்து சென்னை கொண்டு சென்றுள்ளனர். சென்னை குளோபல் மருத்துவமனையில் கார்த்திக்கை பரிசோதித்த நரம்பியல் மருத்துவர் கார்த்திக் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கார்த்திக்கின் கல்லீரலும் சிறுநீரகமும் நடராஜனுக்கு பொருத்தப்பட்டுள்ளது. பொதுவாக உடலுறுப்பு தானம் செய்ய தமிழ்நாடு உடலுறுப்பு பதிவு நெட்வொர்க்கில் பதிவு செய்து சீனியாரிட்டி அடிப்படையில் காத்திருப்பவர்களுக்குத்தான் உடலுறுப்புகள் வழங்கப்பட வேண்டும். ஆனால் எந்த நடைமுறையும் பின்பற்றப்படாமல் கார்த்திக்கின் கல்லீரலையும் சிறுநீரகத்தையும் நடராஜனுக்கு பொருத்தியுள்ளனர்.

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் இருந்தபோதே கார்த்திக், மூளைச்சாவு அடைந்துவிட்டாரா? இல்லையா என்பதில் சந்தேகம் நீடிக்கிறது. ஒருவேளை மூளைச்சாவு அடைந்தால்கூட 19 வயது இளைஞர் என்பதால் அவரது உயிரை காப்பாற்ற முடிந்தவரை போராடி தங்களுடன் வைத்துக்கொள்ளத்தான் பெற்றோர் விரும்புவர். அப்படி இருக்கையில், கார்த்திக்கு சிகிச்சை அளித்த தஞ்சாவூர் அரசு மருத்துவர்களே கார்த்திக்கை சென்னைக்கு அழைத்து செல்ல உடன்பட மறுத்த நிலையில், வலுக்கட்டாயமாக கார்த்திக் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். 

ஆரம்பத்தில் இதற்கு உடன்பட மறுத்த கார்த்திக்கின் குடும்பத்தார் பின்னர் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த விஷயத்தில் தமிழக அமைச்சர் ஒருவரும் மருத்துவர் ஒருவரும் ஆரம்பம் முதலே அக்கறை காட்டி வந்ததாகவும் அவர்களது வற்புறுத்தலின் பேரிலே கார்த்திக்கின் குடும்பத்தாரும் பின்னர் ஒப்புக்கொண்டதாகவும் தஞ்சாவூர் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கார்த்திக்கின் குடும்பத்தினர் பணத்தால் கவரப்பட்டிருக்க வேண்டும். அப்படியில்லை என்றால் மிரட்டப்பட்டிருக்க வேண்டும். ஒருவேளை தஞ்சாவூர் அரசு மருத்துவர்கள் ஒப்புக்கொண்டிருந்தால் கார்த்திக்கை அழைத்து சென்றிருக்கலாம். அப்படி இல்லாமல் கார்த்திக்கு தொடர்ச்சியாக தஞ்சாவூர் அரசு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவந்த நிலையில், அவர்களின் அறிவுரையை மீறி கார்த்திக்கின் குடும்பத்தார் கட்டாயப்படுத்தப்பட்டிருந்தால் அது தவறு. 

ஏனென்றால் அர்த்தமில்லாமல் தஞ்சாவூர் அரசு மருத்துவர்கள் கார்த்திக்கிற்கு தொடர்ச்சியாக சிகிச்சை அளித்திருக்க வாய்ப்பில்லை. கார்த்திக்கை குணமாக்கிவிட முடியும் என்ற நம்பிக்கையில்தான் சிகிச்சை அளித்திருந்திருப்பார்கள். ஆனால் அதற்குள் அவசர அவசரமாக கார்த்திக்கை கடத்தி கல்லீரல் எடுக்கப்பட்டுள்ளது.

கார்த்திக் ஏழை என்பதால்தான் அதிவேகமாக இந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏழையாக இருந்தால் பணத்தைக் காட்டியோ அல்லது மிரட்டியோ எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாமா?