லோனும் இல்லை, வீடும் கிடைக்கவில்லை..! முதலமைச்சர் வழங்கிய செக்கை காட்டி வேதனைப்படும் நரிக்குறவ பெண்
நரிக்குறவர்களுக்கு லோன் தருவதாகவும், வீடு கட்டி தருவதாகவும் கூறினார்கள். ஆனால் இதுவரை எதுவும் நடைபெறவில்லையென நரிக்குறவ பெண்மணி அஸ்வினி வேதனையோடு தெரிவித்துள்ளார்
அமைச்சரோடு அன்னதானம்
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் சுற்றுலா வரும் பயணிகளிடம் நரிக்குறவர்கள் ஊசி, பாசிமணி விற்று தொழில் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஸ்ரீதலசயன பெருமாள் கோவிலில் நரிக்குறவர் சாதியைச் சேர்ந்தவர்கள் அன்னதானம் சாப்பிடச் சென்றபோது விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து நரிக்குறவர் பெண்மணி பேசிய வீடியோ ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் அரசாங்கம்தானே அன்னதானம் போடுது, உங்க வீட்டுக் கல்யாண சாப்பாடு போடற மாதிரி அடிச்சு விரட்டறீங்க" என நரிக்குறவ பெண்மணி அஸ்வினி கேள்வி எழுப்பியிருந்தார். இதனை பார்த்த தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அதே கோயிலில் அந்த பெண்மணியோடு அன்னதானம் சாப்பிட்டார். இதனையடுத்து நரிக்குறவ பெண்மணியின் கோரிக்கையை முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்திற்கு சேகர்பாபு கொண்டு சென்றிருந்தார்.
நரிக்குறவர் வீட்டிற்கு சென்ற முதலமைச்சர்
இதனையடுத்து செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம் பூஞ்சேரி கிராமத்துக்குச் சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நரிக்குறவர் மற்றும் இருளர் மக்களுக்கு 4.53 கோடி மதிப்பில் 283 நபர்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள், குடும்ப அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகள், சாதிச் சான்றிதழ்கள், நல வாரிய அட்டைகள், பயிற்சிக்கான ஆணைகள், வங்கிக் கடனுதவிகள் ஆகியவற்றை வழங்கினார். மேலும் முதலமைச்சரின் சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், பூஞ்சேரி கிராமத்தில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்த 81 நபர்களுக்கு ரூ.3.52 கோடி மதிப்பீட்டில் வீட்டுமனை பட்டாக்கள், 6 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகள், 21 நபர்களுக்கு குடும்ப அட்டைகள், 18 நபர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகள், 88 நபர்களுக்கு இருளர் (ST) சாதி சான்றிதழ்கள், 34 நபர்களுக்கு நரிக்குறவர் (MBC) சாதிச் சான்றிதழ்கள், 34 நபர்களுக்கு நரிக்குறவர் நல வாரிய அட்டைகளளும் வழங்கப்பட்டது.
லோனும் இல்லை, வீடும் இல்லை
இந்தநிலையில் முதலமைச்சர் வழங்கிய கடனுதவி தற்போது வரை தங்களு்கு கிடைக்கவில்லையென நரிக்குறவ பெண்மணி அஸ்வினி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது கோரிக்கைகள் இதுவரை நிறைவேறவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, எங்கள் பகுதிக்கு முதலமைச்சர் ஐயா வந்தாங்க 12 பேருக்கு தலா ஒரு லட்சம் கொடுத்தாங்க, 30 பேருக்கு 10 ஆயிரம் லோன் கொடுத்தாங்க, பட்டா, வீடு என நிறை சொன்னாங்க, ஆனால் எதுவுமே நடக்கவில்லை, ஒரு லட்சம் லோன் யாருக்கும் கொடுக்கவில்லை, ஒரு வருடம் ஆகிவிட்டது. கடை இருந்தா மட்டும் லோன் கொடுப்போம் என வங்கியில் கூறுகிறார்கள், இது தொடர்பாக அமைச்சர் தா.மோ அன்பரசனை பார்த்தோம், அவர் மாவட்ட ஆட்சியரை பார்க்க சொன்னார். மாவட்ட ஆட்சியர் கடை கொடுக்கலாம் என கூறினார். விஏஓ வந்து பார்த்தார்கள் கடைகள் காலியாக இல்லையென கூறுகிறார்கள்.
நம்பிக்கை செத்து போத்து
முதலமைச்சரே உங்கள் வீட்டிற்கு வந்தார்கள் நீ ஏன் மறுபடியும் ரோட்டில் ஊசி, பாசி விக்குறேனு நிறைய பேர் கேட்கிறார்கள். நீ எங்கையோ போயிருக்க வேண்டியது ஆச்சே என கூறுகிறார்கள். வந்த லோனும் வரவில்லை, வீடு கட்டி தாரேனு சொன்னாங்க அதுவும் இல்லை, பாத்ரூம் கட்ட செங்கல் எல்லாம் கொண்டு வந்தாங்க திரும்பவும் அந்த செங்கலை எடுத்துட்டு போயிட்டாங்கள், நம்பிக்கை முழுவதுமாக செத்து போச்சு என கூறினார். முதலமைச்சர் ஸ்டாலின் ஐயா ஒரு லட்சம் செக் கொடுத்தாங்கள், வங்கியின் பெயரையும் மேடையில் பெருமையாக கூறினார்கள், நிகழ்ச்சி முடிந்ததும் செக் அட்டையை திரும்ப கொண்டு போயிட்டாங்க, வங்கியில் கேட்டா லோன் தர மாட்டேங்கிறாங்க, எங்கள் மக்கள் படிக்கவில்லை, படித்திருந்தால் எதாவது வேலைக்கு போயிருப்போம், லோன் கூட தேவையில்லை, எம்பிசி இருப்பதால் எந்த வேலையும் கொடுக்க மாட்டேன்கிறாங்க, எஸ்டி மாத்துங்கனு கேக்குறோம் இன்னும் நடைபெறவில்லையென வேதனையோடு கூறினார்.
இதையும் படியுங்கள்
“முதல்வரின் வளர்ப்பு.. நான் ஏமாறமாட்டேன் ” ராஜினாமா கூட! எமோஷனல் ஆன அமைச்சர் அன்பில் மகேஷ்