போதைப்பொருள் விவகாரத்தில் தனது மீது அவதூறு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதிகரித்து விட்டதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவிப்பதாக அவர் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த நிலையில், போதைப்பொருள் விவகாரத்தில் தனது மீது அவதூறு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவனான திமுக நிர்வாகி ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் கடத்தல் கும்பல் பிடிபட்டு சுமார் ஒரு மாதம் ஆகிறது. பாரதப் பிரதமர் மோடியே, தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் குறித்துக் கவலை தெரிவித்திருக்கிறார். ஆனால் இது குறித்து ஒரு வார்த்தை இதுவரை பேசாத முதலமைச்சர் ஸ்டாலின், தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதிகரித்து விட்டது என்ற உண்மையைக் கூறியதற்காக என் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

தினசரி செய்திகளைப் படிக்கும் வழக்கம் இருக்கிறதா முதலமைச்சர் அவர்களே? மக்களுக்கு திமுக ஆட்சியின் அவலம் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக, அவதூறு வழக்கு தொடர்ந்து எங்கள் குரலை முடக்கும் முயற்சி வெற்றி பெறாது. தொடர்ந்து மக்கள் மத்தியில் உங்கள் அவல ஆட்சியை அம்பலப்படுத்திக்கொண்டு தான் இருப்போம்.” என பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு காவல்துறை, டெல்லி சிறப்பு காவல்துறை நடத்திய சோதனையில் 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3,500 கிலோ போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும், அதன் மொத்த மதிப்பு ரூ. 2,000 கோடி எனவும் தெரிய வந்துள்ளது.

மேலும், இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் செயல்பட்டது திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக் என்பதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவான அவரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். ஜாபர் சாதிக்கை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்.சி.பி போலீசாருக்கு டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளாக திமுக எம்.பி. இல்லாத மக்களவை தொகுதி எது தெரியுமா?

ஜாபர் சாதிக் திமுக நிர்வாகி என்பதால், ஆளும் திமுக அரசை பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடுமையாக சாடி வருகிறார். அதேசமயம், போதைப்பொருள் விவகாரம் தெரியவந்ததும் உடனடியாக திமுகவில் இருந்து ஜாபர் சாதிக் நிரந்தரமாக நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.