திருமாவளவன் அதிமுக மற்றும் தேமுதிக கூட்டணிக்கு அழைப்பை மறுத்ததற்கு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்துள்ளார். 

புதுச்சேரியில் விசிக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன்: தவெகவுடன் சேரும் வாய்ப்பும் எங்களுக்கு இருந்தது. ஆனால் அந்த கதவையும் நான் மூடினேன். நீங்கள் நினைக்கிற சராசரி அரசியல்வாதி அல்ல இந்த திருமாவளவன். பாமக, பாஜக இடம் பெற்றுள்ள கூட்டணியில் விசிக இடம்பெறாது. அதனால் எந்த பாதிப்பு வந்தாலும் அதைப்பற்றி ஐ டோன்ட் கேர் என கூறியிருந்தார். இந்நிலையில் கூட்டணிக்கு அழைத்த அதிமுக மற்றும் தவெக கதவுகளை மூடிவிட்டதாக திருமாவளவன் கூறியதற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்துள்ளார். 

காவல்துறை அனுமதி மறுப்பு

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நயினார் நாகேந்திரன்: காஷ்மீர் சம்பவம் குறித்து பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சியில் மிகவும் உருக்கமாக பேசியுள்ளார். இந்த முறை 121வது மன் கி பாத் நிகழ்ச்சியை மக்களோடு நான் நின்று பார்த்தேன். கடந்தாண்டு இதே இடத்தில் நடைபெற்ற மன் கி பாத் நிகழ்ச்சிக்கு எங்களுக்கு காவல்துறை அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தற்போது ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது.

இதையும் படிங்க: விஜய்யோடு கூட்டணி, அதிமுகவில் துணை முதலமைச்சர் பதவி.! நிராகரித்தது ஏன்.? திருமா பரபரப்பு பேச்சு

பாஜக நிகழ்ச்சி நடத்தக்கூடாது

துணை முதல்வர் உதயநிதியின் தொகுதியாக இருக்கும் காரணத்தினால் காவல் இணை ஆணையர் பாஜக நிகழ்ச்சி நடத்தக்கூடாது என கூறினாரா என்பது தெரியவில்லை. மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். ஆட்சி என்பது நிரந்தரமானது இல்லை என்பதை இந்த நேரத்தில் தெரிவிக்க விரும்புகிறேன். நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி கடிதம் கொடுத்து ஒரு வாரம் நிறைவு பெற்றுள்ளது. ஆனால் இன்று பொது இடத்தில் செய்யக்கூடாது மண்டபத்தில் செய்யுங்கள் எனக் கூறியுள்ளார். மண்டபத்தில் ஒதுக்கியதற்கு விஜயகுமாருக்கு ஒரு விதத்தில் நன்றி கூறுகிறேன். வெளியில் செய்திருந்தால் வெயிலில் நின்று இருக்க வேண்டும். இங்கே குளிர்ச்சியாக உள்ளது. ஆகவே அவருக்கு நன்றி.

திருமாவளவனுக்கு பதிலடி

கூட்டணி ஆட்சி அதிகாரத்தின் பங்கு எனக்கூறி கூட்டணிக்கு அழைத்த அதிமுக மற்றும் தவெக கதவுகளை மூடிவிட்டதாக விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கூறுகிறார். திருமாவளவன் ஒரு கூட்டணியில் உள்ளார். அடுத்தவர் வீட்டின் கதவை மூட திருமாவளவன் யார்? வேண்டுமானால், திருமாவளவன் அவர் வீட்டு கதவை மூடிக்கொள்ளட்டும் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.