பாஜக மாநில தலைவர் ரேஸ்; வானதியை ஓரம் கட்டிய ராகவன் - விரைவில் வெளியாக இருக்கும் பரபரப்பு தகவல்
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விரைவில் இங்கிலாந்து செல்லவுள்ள நிலையில், அவர் வகித்து வந்த தலைவர் பொறுப்பு விரைவில் கே.டி.ராகவனுக்கு வழங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்று நாங்கள் தான் என பல கட்சிகள் சொல்லி வந்த நிலையில் களத்தில் நாங்களும் இருக்கிறோம் என அனைவரையும் சொல்ல வைத்தவர் தான் தற்போயை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கர்நாடகா மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக தனது அதிரடியை காட்டி வந்த அண்ணாமலை தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக நெல்லை, கோவை உட்பட 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து மாவட்டத் தலைவராக இருந்த எல்.முருகன் எம்.பி.யாக ஆக்கப்பட்டார். மேலும் அவருக்கு மத்திய இணையமைச்சர் பொறுப்பும் வழங்கப்பட்டது. அதன் பின்னர் அண்ணாமலை தமிழக பாஜக.வின் தலைவராக நியமிக்கப்பட்டார். முன்னதாக தமிழிசை சௌந்தரராஜன், எல்.முருகன் உள்ளிட்டோர் மாநிலத்தலைவர்களாக மென்மையான போக்கை கடைபிடித்த நிலையில், அண்ணாமலை தனது வழக்கமான அதிரடி நடவடிக்கைகளால் தமிழகத்தில் அனைத்து கட்சி தலைவர்களாலும் பேசுபொருளாக மாறினார்.
ரெளடியுடன் பிறந்த நாள் கொண்டாடிய போலீஸ்? கஸ்டடியில் இருந்த நபர் மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாட்டம்
தொடர்ந்து அதிரடி காட்டி வந்த அண்ணாமலை மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக தான் தமிழகத்தில் திமுக, அதிமுக.வுக்கு மாற்று என்று சொல்ல வைத்தார். பாஜக.வை வளர்க்கும் முயற்சியாக அதிமுக முன்னாள் தலைவர்களை தொடா்ந்து விமர்சித்து வந்ததன் விளைவாக பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக அறிவித்தது. அதனை பொருட்படுத்தாத அண்ணாமலை அமமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார். மேலும் தென் மாவட்டங்களில் சற்று செல்வாக்குடன் இருந்த சமத்துவ மக்கள் கட்சியை கலைத்த அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார்.
போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் பாஜக தோல்வியை தழுவி இருந்தாலும், அதிமுக தேனி, ராமநாதபுரம், நெல்லை உள்ளிட்ட பல தொகுதிகளில் அதிமுகவின் தோல்விக்கும் காரணமாக இருந்தது. இது அரசியல் விமர்சகர்களிடையே இருவேறு கருத்துகளை வெளிப்படுத்தியது. இதனிடையே அண்ணாமலை சர்வதேச அரசியல் தொடர்பான படிப்பை மேற்கொள்வதற்காக இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு செல்ல உள்ளார். ஆகஸ்ட் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் வரை இந்த படிப்பு இருக்கும் என சொல்லப்படுகிறது.
இந்த காலக்கட்டத்தில் தமிழக பாஜக.வின் புதிய தலைவராக இருக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது. அதன்படி இந்த போட்டியில் கோவை சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் இடையே கடுமையான போட்டி நிலவுவதாக சொல்லப்படுகிறது. இது ஒருபுறம் இருந்தாலும் சர்ச்சை வீடியோவில் சிக்கி கட்சியில் இருந்து சற்று ஒதுங்கியிருந்த கே.டி.ராகவன் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் நயினார் நாகேந்திரன் செயல் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.