விழுப்புரம்

காவிரி மேலாண்மையை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி விழுப்புரத்தில் நாம் தமிழர் கட்சியினர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களாக அரசியல் கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் நேற்று 4-வது நாளாகவும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்தன.

அதன்படி, தியாகதுருகம் அருகே மாடூரில் உள்ள சுங்கச்சாவடியை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில்  ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் நகரச் செயலாளர் ஜீவானந்தம் தலைமைத் தாங்கினார். 

மாடூரில் உள்ள சுங்கச்சாவடியில் கையில் அவர்களின் கட்சிக் கொடிகளுடன் திரண்ட நாம் தமிழர் கட்சியினர், "காவிரி மேலாண்மை அமைக்காத மத்திய அரசை எதிர்த்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும்" என்றும் முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் இந்தப் போராட்டம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவலாளர்கள் அக்கட்சியினர் 30 பேரை கைது செய்தனர்.

அதேபோன்று, கோட்டக்குப்பத்தில் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பினர் அதன் நகர செயலாளர் முகம்மது தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் அனைவரும் காவிரி பிரச்சனைக்காக நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். பின்னர் நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர்கள் சங்க தலைவர் தமிழ்செல்வன் தலைமை வகித்தார். இதில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர்கள் ராஜாராம், சுப்புராயலு, வழக்கறிஞர்கள் சங்கரன், ராஜேஷ், ராதாகிருஷ்ணன், செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

இதேபோல கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சின்னத்தம்பி தலைமையில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.