ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிப்பதை போல, கணவனையும், கள்ளக்காதலனையும் கொலை செய்ய திட்டம் தீட்டிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை எம்ஜிஆர் நகர் நெசப்பாக்கம் பாரதிநகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி மஞ்சுளா மின்வாரியத்தில் பணியாற்றி வந்துள்ளார். மஞ்சுளாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த நாகராஜனுக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்துள்ளது.

இதனால் மஞ்சுளா - கார்த்திகேயன் தம்பதியின் மகன் ரிதேஷ் சாயை தினமும் டியூசனுக்கு அழைத்துச் சென்று வருவதை நாகராஜன் வாடிக்கையாகக் கொண்டிருந்தான். இந்த சமயத்தில் தாய் மஞ்சுளாவுக்கும் - நாகராஜனுக்கும் இடையே இருந்த தகாத உறவு குறித்து தந்தை கார்த்திகேயனிடம் ரிதேஷ் சாய் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நாகராஜன், சிறுவன் ரிதேஷைக் கடத்திச் சென்று சேலையூர் அருகே மது ஊற்றிக் கொடுத்து கம்பியால் கொடூரமாக அடித்துக் கொன்றது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து நாகராஜன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். நாகராஜன் விரைவில் ஜாமீனில் வெளி வர இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதன்காரணமாக, கணவர் கார்த்திகேயன், மஞ்சுளாவை பிரிந்து வாழ்ந்து வந்தார். மேலும், மகனின் கொலை வழக்கில் மஞ்சுளாவையும் சேர்க்க வேண்டும் என்று கார்த்திகேயன் போலீசாரிடம் புகார் அளித்தார். மஞ்சுளாவுக்கு தான் வாங்கிக் கொடுத்த சொத்துகளை மீட்டுத் தரவேண்டும் என்றும் அவர் காவல்துறையினரிடம் முறையிட்டு வந்துள்ளார். இதனிடையே, சிஐடி நகரில் தங்கையின் வீட்டருகே வசித்து வந்த பிரசாந்த் என்ற மற்றொரு நபருடன் மஞ்சுளாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கணவன் உயிரோடு இருந்தால் சொத்தைக் கேட்டு தொல்லை தருவார் என்பதாலும், மகனை கொன்றதற்காக கள்ளக்காதலனையும் கொலை செய்ய மஞ்சுளா திட்டம் தீட்டியுள்ளார்

.
 
இதற்கு தன்னுடன் புதிதாக பழகிய பிரசாந்தின் உதவியை மஞ்சுளா நாடியுள்ளார். மஞ்சுளாவின் திட்டத்தை நிறைவேற்ற தாம் உதவுவதாக கூறிய பிரசாந்த், அதற்காக 2 லட்சம் ரூபாய் பணம் கேட்டு வாங்கியுள்ளான். அத்துடன், மஞ்சுளாவின் திட்டத்தை நிறைவேற்ற பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புள்ள சுதாகர் என்ற நபரையும் ஏற்பாடு செய்துள்ளான். இதன் பின்னர் மூவரும் சேர்ந்து திருவல்லிக்கேணியில் உள்ள கடை ஒன்றில் 4 ஆயிரம் ரூபாய்க்கு பிஸ்டல் துப்பாக்கி ஒன்றை வாங்கி உள்ளனர்.

இந்த நிலையில் கொலைத் திட்டத்தை அரங்கேற்ற கூடுதல் பணம் தருமாறு பிரசாந்த், சுதாகர் இருவரும் மஞ்சுளாவைக் கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மஞ்சுளா, வெளிநாட்டுப் பொருட்கள் வாங்கித் தருவதாக கூறி 2 லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு ஏமாற்றுவதாக பிரசாந்த், சுதாகர் இருவர் மீதும் சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். மூவரையும் போலீசார் துருவித் துருவி விசாரித்த போது, கள்ளக் காதலனையும், கணவனையும் சேர்த்தே தீர்த்துக் கட்ட மஞ்சுளா திட்டம் தீட்டியிருப்பது அம்பலமானது. இதையடுத்து, அவர்களிடமிருந்து பிஸ்டல் துப்பாக்கியைப் பறிமுதல் செய்த போலீசார், மூன்று பேரையும் கைது செய்துள்ளனர்.