Asianet News TamilAsianet News Tamil

மாமனார் என்று நினைத்து மருமகனை படுகொலை செய்த மர்ம கும்பல்; வெடிகுண்டு வீசியும், கத்தியால் குத்தியும் வெறிச்செயல்...

murderer by Mysterious gang killed son-in-law instead of father-in-law
murderer by Mysterious gang killed son-in-law instead of father-in-law
Author
First Published Feb 27, 2018, 8:05 AM IST


திருநெல்வேலி

திருநெல்வேலியில் வெடிகுண்டு வீசியும், கத்தியால் குத்தியும் தனியார் கல்லூரி பேராசிரியர் படுகொலை செய்யப்பட்டார். மாமனார் என்று நினைத்து மர்ம கும்பல், மருமகனை கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகே உள்ள சீவலப்பேரியை அடுத்துள்ளது கொடியன்குளம் கிராமம். இது தூத்துக்குடி மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது.

இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் என்ற கொடியன்குளம் குமார் (56). புதிய தமிழகம் கட்சியில் முக்கிய நிர்வாகியாக செயல்பட்டு வந்தார். இவர் அண்மையில்தான் அதிமுகவில் சேர்ந்தார்.

இவர் திருநெல்வேலி, பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அருகில் அண்ணா நகர் விரிவாக்க பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வீடு கட்டி குடியேறினார். இதே வீட்டில் குமாரின் மூத்த மகள் அனுசுயா தனது கணவர் செந்தில்குமார் மற்றும் மூன்று வயது பெண் குழந்தையுடன் வசித்து வந்தார்.

எம்.இ.என்ஜினீயரிங் படித்துள்ள செந்தில்குமார் திருநெல்வேலி பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.

கட்சி பணி தவிர ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார் குமார். இந்த நிலையில் பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் ஒரு நிலத்தை விற்பது தொடர்பாக குமாருக்கும், மற்றொரு தரப்புக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.

இதனையடுத்து எதிர்தரப்பினர் இந்த நிலப் பிரச்சனையில் இருந்து விலகிக் கொள்ளுமாறு குமாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், குமார் அந்த நிலத்தை விற்க முயற்சிகள் மேற்கொண்டாராம்.

இந்த நிலையில், நேற்று காலை 8 மணியளவில் வீட்டின் பின் பகுதியில் உள்ள செடிகளுக்கு குமார் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். வீட்டிற்குள் செந்தில்குமார், அவரது மனைவி அனுசுயா, மாமியார் விஜயலட்சுமி ஆகியோர் இருந்தனர்.

அப்போது, வீட்டின் முன்பக்க காம்பவுண்டு சுவர் வழியாக ஒரு கும்பல் ஏறி குதித்து உள்ளே நுழைந்தது. அவர்கள் திடீரென்று வீட்டின் கதவு மீது ஒரு நாட்டு வெடிகுண்டை வீசினர். அந்த குண்டு வெடித்ததால் கதவு வெடித்து உடைந்தது.

பின்னர் அந்த கும்பல் அதிரடியாக வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த மூன்று பேர் மீது மற்றொரு நாட்டு வெடிகுண்டை வீசினர். அந்த குண்டு வெடிப்பில் இருந்து செந்தில்குமார் உள்பட மூவரும் பேரும் உயிர் தப்பினர். ஆனால், உள்ளே யார் இருக்கிறார்கள்? என்பது தெரியாத வகையில் வீடு முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் உள்ளே இருந்த மூவரும் பேரும் நிலைகுலைந்தனர்.

உடனே அந்த கும்பல் செந்தில்குமாரை சரமாரியாக கத்தியால் குத்தினர். இதைக் கண்ட செந்தில்குமாரின் மனைவி அனுசுயா, மாமியார் விஜயலட்சுமி ஆகியோர் தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை தடுக்க முயற்சி செய்தனர். இதில் அனுசுயாவை அங்குள்ள சுவர் மீது அந்த கும்பல் தள்ளி விட்டது. பின்னர் அவர்கள், விஜயலட்சுமியின் கையில் கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து வேகமாக தப்பி ஓடிவிட்டனர்.

இதனிடையே வீட்டின் பின்புறமாக தோட்டத்தில் நின்றிருந்த குமார் நடந்த விபரீதத்தை அறிந்து கையில் கம்புடன் மர்ம கும்பலை விரட்டியுள்ளார். ஆனால், அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் அந்த பகுதியில் தயார் நிலையில் நிறுத்தி வைத்திருந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் ஏறி தப்பிச் சென்றுவிட்டனர்.

இதனையடுத்து குமார் மற்றும் உறவினர்கள் சேர்ந்து செந்தில்குமாரையும், விஜயலட்சுமியையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செந்தில்குமார் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். விஜயலட்சுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை மாநகர காவல் துணை ஆணையர்கள் சுகுணாசிங் (சட்டம் - ஒழுங்கு), பெரோஸ்கான் அப்துல்லா (குற்றம் - போக்குவரத்து), உதவி ஆணையர் விஜயகுமார் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

காவலாளர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதாவது, ஆள்மாறாட்டத்தில் இந்த கொலை நடந்து இருக்கிறது. நிலப்பிரச்சனையில் குமாரை கொலை செய்வதற்காக கூலிப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வீட்டுக்குள் வெடிகுண்டுகளை வீசி அங்கிருந்த செந்தில்குமாரை, குமார் என்று கருதி கொலை செய்துவிட்டனர்.

இதனையடுத்து குமாரை காவலாளர்கள் ஐகிரவுண்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். சம்பவம் குறித்து விசாரித்து புகார் பெற்றனர். அப்போது அவர், "கே.டி.சி. நகரில் நிலப்பிரச்சனை தொடர்பாக கடந்த மாதம் ஒரு வழக்குரைஞர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது நான் விட்டுக்கொடுக்காமல் பேசினேன். இதனால் என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்காக எனது வீட்டுக்குள் புகுந்த கும்பல், அங்கிருந்த என்னுடைய மருமகனை கொலை செய்து விட்டனர்.

குண்டுகள் வீசப்பட்ட உடன் நான் அங்கிருந்த கம்பை எடுத்துக்கொண்டு வீட்டின் முன்பக்கமாக ஓடி வந்தேன். ஆனால் அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவத்தில் நேரடியாக ஆறு பேர் ஈடுபட்டனர்.

அவர்களை நேரில் பார்த்தால் அடையாளம் காட்டுவேன். இந்தக் கும்பலில் இருவர் மொட்டை போட்டிருந்தனர்.  இதுதவிர சீவலப்பேரி அருகே உள்ள மடத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இருவருக்கு கொலை கும்பல் பற்றிய முழு விவரம் தெரியும்" என்று காவலாளர்களிடம் குமார் விளக்கமளித்தார்.

இதுகுறித்து பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் பத்மாவதி வழக்குப்பதிந்தார். இந்த நிலையில் குமார் அளித்த தகவலின் அடிப்படையில் மடத்துப்பட்டியை சேர்ந்த இருவரை தனிப்படை காவலாளர்கள் நேற்று மதியம் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்கள் இருவரையும் ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

Follow Us:
Download App:
  • android
  • ios