திருப்பூரில்  பணம், வசதியான வாழ்க்கை, அக்காவின் கணவர் என அனைத்துக்கும் ஆசைப்பட்டதால், கள்ளக் காதலனுடன் சேர்ந்து அக்காவையே தங்கை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் பூபாலன். இவருக்கு நதியா என்ற மனைவியும் 4 வயதில் குழந்தையும் உள்ளனர். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்புக்காக திருப்பூர் வந்தார். பனியன் நிறுவனங்களில் காண்ட்ராக்ட் தொழில் செய்து வசதி வாய்ப்பை பெருக்கிக் கொண்டார். அவரது தம்பிகள் 2 பேரும் திருப்பூரிலேயே உள்ளனர்.

நதியாவின் தங்கை ரேகா என்பவர் அப்பகுதியிலேயே வசித்து வந்தார், அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில் நாகராஜ் என்பவருடன் கள்ளக் காதல் ஏற்பட்டதால் அவரது கணவர் ரேகாவை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

நாகராஜுடன் கள்ளக்காதலை வளர்த்து வந்த ரேகா, தனது அக்கா கணவர் பூபாலுடனும் கள்ளத் தொடர்பு வைத்துள்ளார். பூபாலன் வசதியாக இருந்ததால் அவரை இரண்டாவதாக திருமணம்  செய்யவும் ஆசைப்பட்டுள்ளார். அதற்கு அக்கா நதியா தடையாக இருப்பதாக நினைத்த ரேகா, தன்து கள்ளக் காதலன் நாகராஜுடன் சேர்ந்து நதியாவை கொல்ல திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பூபாலன் வேலைக்குச் சென்றிருந்தபோது அக்கா வீட்டுக்கு வந்த ரேகா அவரது குழந்தையை எடுத்துக் கொண்டு தனது வீட்டிற்குச் சென்றுவிட்டார். இதைத் தொடர்ந்து நதியா மட்டும் தனியாக இருந்த வீட்டுக்குள் நைசாக நுழைந்த நாகராஜ் நதியாவின் கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு, அவர் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை திருடிச் சென்றார்.

முதலில் திருட்டுக்காகத்தான் இந்த கொலை நடந்திருக்கிறது என நினைத்த போலீஸ் அந்த கோணத்திலேயே விசாரணை நடத்தி வந்தது. அப்போது தான் ரேகா,  விசாரணை விபரங்களை அவ்வப்போது யாரிடமோ செல்போனில் சொல்லிக் கொண்டிருப்பது தெரிய வந்ததது. இதை கவனித்த போலீசார் ரேகாவை தங்களது விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாணையில் அனைத்து விபரங்களும் தெரிய வந்தது. இதையடுத்து நாகராஜனையும், ரேகாவையும் போலீசார் கைது செய்யனர். தற்போது நதியாவின் குழந்தையும், ரேகாவின் குழந்தையும் தாயில்லாமல் தவித்து வருகின்றனர்.