மழையால் தடைபட்ட முரசொலி பவளவிழா பொதுக்கூட்டம் செப்டம்பர் 5 ஆம் தேதி நடைபெறும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

திமுக தலைவர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட ‘முரசொலி’ பத்திரிகையின் 75 ஆண்டுகள் நிறைவடைவதால் பவள விழா 2 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.  

இந்த விழாவை முன்னிட்டு நேற்று முந்தினம் காலை 10 மணிக்கு கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள முரசொலி அலுவலக வளாகத்தில் முரசொலி காட்சி அரங்கம் திறக்கப்பட்டது.

திராவிட கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் ‘தி இந்து’ குழுமத்தின் தலைவர் என்.ராம் காட்சி அரங்கை திறந்து வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், ஆர்.எஸ்.பாரதி எம்.பி., முரசொலி செல்வம், மு.க.தமிழரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைதொடர்ந்து, மாலை 5 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் முரசொலி பவள விழா வாழ்த்தரங்கம் நடைபெற்றது. 

இதையடுத்து இரண்டாவது நாளாக நந்தனத்தில் முரசொலி பவள விழா நடைபெற்று கொண்டிருந்தது. 

இந்நிலையில் மழை குறுக்கிட்டதால் முரசொலி பவளவிழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இதைதொடர்ந்து மழையால் தடைபட்ட முரசொலி பவளவிழா பொதுக்கூட்டம் செப்டம்பர் 5 ஆம் தேதி நடைபெறும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.