மாநகர பேருந்து டிரைவரை கல்லூரி மாணவர்கள் கடுமையாக தாக்கிய சம்பவம் சென்னை சென்ட்ரல் அருகே நடந்துள்ளது. டிரைவரை தாக்கிய மாணவர்களைப் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தாம்பரத்தில் இருந்து கொருக்குப்பேட்டைக்கு, சென்னை மாநகர பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. சென்ட்ரல் அருகே வந்தபோது கல்லூரி மாணவர்கள் 4 பேர் பேருந்தில் ஏறியுள்ளனர்.

பேருந்து சென்று கொண்டிருந்த நிலையில் அவர்கள் பஸ்சில் ஏறியுள்ளனர். அப்போது டிரைவரிடம் சென்ற அவர்கள் அசிங்கமான வார்த்தைகளால் பேசியுள்ளனர். பேசிக் கொண்டிருந்தபோதே மாணவன் ஒருவன், கல்லைக் கொண்டு பேருந்து கதவு மீது எறிந்துள்ளான். 

அந்த கல், பேருந்து ஓட்டுநர் மீது பயங்கரமாக தாக்கியுள்ளது. இதனை அடுத்து, பேருந்தை நிறுத்தி மாணவர்களிடம் இது குறித்து கேட்டதற்கு டிரைவரை அவர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். டிரைவரை காப்பாற்றப்போன ஓட்டுநரையும் அவர்கள் தள்ளிவிட்டுள்ளனர்.

படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர் கருப்பசாமி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். டிரைவரை தாக்கிய மாணவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பேருந்தில், கல்லூரி மாணவர்கள் இதுபோன்று செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று பேருந்து நடத்துனர் வெங்கடேசன் கூறினார். பேருந்து ஓட்டுநரை கல்லூரி மாணவர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.