Mountain train was stopped by elephants

நீலகிரி

குன்னூர் அருகே மலை இரயிலை இரண்டு குட்டிகள் உள்பட ஐந்து காட்டு யானைகளால் மறித்து நின்றதை பார்த்த எஞ்ஜின் ஓட்டுநர் சுதாரித்துக் கொண்டு இரயிலை நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் தனியார் காப்பி மற்றும் தேயிலை தோட்டங்களில் பலா மரங்கள் ஊடுபயிராக பயிரிடப்பட்டுள்ளன.

ஆண்டுதோறும் பலாப்பழ சீசன் தொடங்கும் காலங்களில் காட்டுயானைகள் சமவெளிவனப் பகுதியிலிருந்து பர்லியார் கே.என்.ஆர்.நகர், மரப்பாலம் ஆகிய பகுதிகளுக்கு வருவது வழக்கம்.

தற்போது இந்த மரங்களில் பலாப்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இரண்டு குட்டிகளுடன் மூன்று காட்டு யானைகள் பர்லியார் மரப்பாலம் வழியாக ரன்னிமேடு பகுதிக்கு வந்தன.

பின்னர், அங்குள்ள தனியார் தோட்டங்களில் இருந்த வாழை மரங்கள், பலா மரங்களை உண்டன.

இதுபற்றி தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து சென்று அந்த யானைகளை அடர்ந்த வன பகுதிக்கு விரட்டினர்.

இந்த நிலையில் மீண்டும் அந்த யானைகள் கடந்த சில நாள்களுக்கு முன்பு, இரண்டு குட்டிகளுடன் சிங்காரா எஸ்டேட் குடியிருப்பு பகுதிக்கு வந்து முகாமிட்டன. அங்குள்ள வாழை மரங்களை தின்றன. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் பீதி அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த வனவர் சௌந்தரராஜன் தலைமையில் வன ஊழியர்கள் அங்கு விரைந்துச் சென்று அந்த யானைகளை விரட்டினர்.

இந்த நிலையில் இரண்டு குட்டிகள் உள்பட ஐந்து யானைகளும், சிங்காரா பகுதியை விட்டு கீழே இறங்கி நேற்று காலை ஹில்குரோவ் பகுதிக்கு வந்தன. பின்னர் அந்த யானைகள் அங்குள்ள தண்டவாளத்தில் நின்றவாறு, மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வந்து கொண்டிருந்த மலை இரயிலை வழி மறித்தன.

இதனை என்ஜின் ஒட்டுநர் பார்த்ததால் சாதுர்யமாக இரயிலின் வேகத்தை குறைக்க தொடங்கியதால் தண்டவாளத்தில் யானைகள் நின்றிருந்த 200 மீட்டர் தூரத்தில் இரயில் வந்ததும் நிறுத்தப்பட்டது. இதனால் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இரயில் என்ஜினில் இருந்து தொடர்ந்து ஒலி எழுப்பப்பட்டு, அந்த யானைகள் தண்டவாளத்தை விட்டு வனப்பகுதிக்குள் கடந்துச் சென்றன.

இதனால் மலை இரயில் அங்கிருந்து ஒரு மணிநேரம் தாமதமாக குன்னூருக்கு புறப்பட்டுச் சென்றது.

இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பீதியை ஏற்படுத்தியது.