காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ள "அம்மா' குடிநீர் கடையில் குடிநீர் இருப்பு இல்லை என்று கூறி தண்ணீர் தர மறுப்பதை கண்டித்து முதல்வரின் குடிநீர் திட்டத்தில் அலட்சியமா? என்று பயணிகள் கேள்வி கேட்கின்றனர்.

பொதுவாக அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் உள்ள கடைகளில் வெளியில் கிடைப்பதை விட பொருள்களின் விலை கூடுதலாக இருக்கும்.

உதாரணமாக வெளியில் ரூ.10 மதிப்புள்ள பிஸ்கெட் பாக்கெட் அங்கு ரூ.12 என்றும், ரூ. 20 மதிப்புள்ள தண்ணீர் பாட்டில் ரூ.23 என்றும் விற்கப்படுவது வழக்கம். அனைத்துப் பொருள்களின் விலையும் இப்படி அதிக விலையிலேயே விற்கப்படுகிறது.

இதற்குக் காரணம் நகராட்சியின் கடைகளை ஏலம் விடும்போது கட்சிப் பிரமுகர்கள் குறைந்த வாடகைக்கு ஏலம் எடுத்து, அதை மேல் வாடகையாக அதிக வாடகைக்கு விடுகின்றனர்.

இதனை தடுக்க அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது வேதனையான ஒன்று.

இந்த நிலையில் பேருந்து பயணிகளுக்கு முக்கியத் தேவையாக இருக்கும் குடிநீரை, ஏழை மக்களுக்கு மலிவு விலையில் வழங்க வேண்டும் என்ற நோக்கில், முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் ரூ.10-க்கு ஒரு லிட்டர் குடிநீரை வழங்கினார்.

அந்த குடிநீரையும் பேருந்து நிலைய கடைகளுக்கு விற்கும் உரிமையை கொடுக்காமல் போக்குவரத்துத் துறையினரே அங்கு ஒரு கடையை அமைத்து அவர்கள் விற்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இத்திட்டம் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந் நிலையில் இத்திட்டம் பெயரளவிலேயே நடத்தப்படுவதாகத் தெரிகிறது.

உதாரணமாக பேருந்து நிலையத்தில் காலை 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே "அம்மா' குடிநீர் விற்கப்படுகிறது. அதற்கு மேல் வந்து கேட்கும் பயணிகளுக்கு இருப்பு இல்லை என்று கூறி மாலையில் வருமாறு திருப்பி அனுப்புகின்றனர் போக்குவரத்துத் துறையினர்.

இதுகுறித்து பயணிகள் தெரிவித்ததாவது: வெளியில் 25 ரூபாய் கொடுத்து தண்ணீர் வாங்க முடியவில்லை என்றுதான் “அம்மா” குடிநீர் வாங்கி குடிக்கிறோம். இப்போ அதுக்கும் இப்படி ஒரு சோதனையா? முதல்வரின் திட்டத்தை இப்படி தான் அலட்சியப்படுத்துவீர்களா? என்று கேட்டனர். மேலும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து "அம்மா' குடிநீர் திட்டத்தை சீராகச் செயல்படுத்த வேண்டும்” என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.