Mother-in-law killed in a drunken state with a knife stabbed volley ...

தாராபுரம்

தாராபுரத்தில் குடும்பம் நடத்த மனைவியை அழைக்க, குடித்திவிட்டு செம்ம போதையில் மாமியார் வீட்டுக்குச் சென்றபோது, ஏற்பட்ட தகராறில் மனைவியை அடிக்கும்போது தடுத்த மாமியாரை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு மருமகன் தப்பி ஓடினார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள பொன்னாபுரத்தைச் சேர்ந்தவர் மந்திரியப்பன். இவரது மனைவி அருக்காணி (50). இவர்களது மகள் தனலட்சுமி.

இவரை பெரமியம் அருகே உள்ள இலக்கமநாய்க்கன்பட்டியைச் சேர்ந்த செல்லமுத்துவுக்கு திருமணம் செய்து வைத்தனர். தற்போது செல்லமுத்து, தனலட்சுமி தம்பதிக்கு செரின்குமார் (8), செல்வராஜ் (5) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

செல்லமுத்து தளவாய்பட்டிணம் அருகே உள்ள சோமனூத்தில் தனியார் கோழிப்பண்ணையில் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார். செல்லமுத்துவுக்கு குடிப்பழக்கம் இருப்பதால் அடிக்கடி கணவன் – மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் செல்லமுத்து, தனலட்சுமியை அடித்துள்ளார். அத்துடன் வீட்டில் தன்னுடன் இருக்கக்கூடாது என்று கூறி குழந்தைகளுடன் தனலட்சுமியை வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டார்.

இதனால் தனலட்சுமி தனது மகன்களுடன் பொன்னாபுரத்தில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு வந்து விட்டார்.

இந்த நிலையில் நேற்று மாலை செல்லமுத்து தனது மாமியார் அருக்காணி வீட்டிற்கு செம்ம குடிபோதையில் வந்தார். அப்போது தனலட்சுமி வீட்டில் இருந்தார். எனவே அவரிடம், செல்லமுத்து குழந்தைகளை அழைத்துக்கொண்டு என்னுடன் வீட்டிற்கு வா என்று கூறினார்.

ஆனால் தனலட்சுமி நீங்கள் குடிக்காமல் வாருங்கள். இங்குள்ள பெரியவர்களை வைத்து பேசி நல்லமுடிவு எடுத்த பிறகு உங்களுடன் வருகிறேன் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த செல்லமுத்து தனது மனைவி தனலட்சுமியை சரமாரியாக அடித்தார். அதை பார்த்த அருக்காணி ஓடி வந்து மருமகன் செல்லமுத்துவைத் தடுத்தார்.

இதற்கிடையில் அடி தாங்க முடியாமல் தனலட்சுமி ஓடிச்சென்று பக்கத்து வீட்டிற்குள் ஒழிந்து கொண்டார். எனவே செல்லமுத்து தனது மாமியார் அருக்காணியிடம், “நீ இருக்கும்வரை உன் மகள் என்னுடன் வாழமாட்டாள் என்று கூறி” நீ செத்துத்தொலை என்று திட்டிவிட்டு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அருக்காணியின் தலை, முகம், வயிறு, முதுகு என பல இடங்களில் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து ஓடி விட்டார்.

படுகாயம் அடைந்த அருக்காணியின் கதறல் சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர்.

அருக்காணி இரத்த சிதற விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்ததுடன் பக்கத்து வீட்டில் இருந்த தனலட்சுமிக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அருக்காணியை சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அருக்காணி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக தாராபுரம் காவலாளர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் தாராபுரம் காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்து செல்லமுத்துவை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

குடும்ப தகராறில் மாமியாரை மருமகன் கத்தியால் குத்திக்கொலைச் செய்த சம்பவத்தால் அந்த பகுதி பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது.