காலை சிற்றுண்டி திட்டம்.. நெல்லை மாநகரில் 22 பள்ளிகளில் ஆட்சியர் தொடங்கி வைப்பு..
நெல்லை மாநகர பகுதியில் உள்ள 22 பள்ளிகளில் முதற்கட்டமாக முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தை, சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப், ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தமிழக முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் முதலமைச்சரால் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இத்திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளில் இன்று முதல் செயல்பாட்டிற்கு வந்தது. இந்நிலையில் நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட பெருமாள்புரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டத்தை பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதனை தொடர்ந்து நெல்லை மாநகராட்சி பகுதியில் உள்ள 22 பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த திட்டத்தின் மூலம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பயன்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல அலுவலகம் அருகே அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சமையல் கூடம் மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
மேலும் படிக்க:Watch Video : நெல்லை மாநகர் பள்ளிகளில் செயல்பாட்டுக்கு வந்த காலை உணவுத் திட்டம்!
இத்திட்டத்தின் மூலம் மாநகராட்சி பள்ளிகளில் தினமும் காலை 8.15 முதல் 8.50 மணி வரை பள்ளிகளில் காலை உணவு மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. மாணவர்களுக்கு கொடுக்கப்படும் உணவின் தரம் குறித்து உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இதற்கான பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட செல்போன் செயலி மூலம் புகைப்படத்துடன் கூடிய தகவல்கள் காலை உணவு வழங்கும் அலுவலர் மூலம் பதிவேற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளியின் மேலாண்மைக் குழு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், உணவின் தரம் உள்ளிட்டவை குறித்து அவ்வப்போது ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஒருங்கிணைந்த சமையல் கூடத்தில் தயாரிக்கப்படும் உணவுகள், ஹாட் பாக்ஸில் நிரப்பப்பட்டு தனித்தனியாக பள்ளியின் பெயர் அதில் ஸ்டிக்கர் ஆக ஒட்டப்பட்டு அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்
மேலும் படிக்க:ஸ்டாலினுக்கே டப் கொடுத்த கனிமொழி.. நேற்று அண்ணன் இன்று தங்கை, உப்புமா சாப்பிட்டுக் கொண்டே போட்டோவுக்கு போஸ்..
சராசரியாக ஒரு பள்ளிக்கு 100 மாணவர்கள் வீதம் உணவுகள் தினமும் அளிக்கப்பட உள்ளது என்று அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியல் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபிமனோகரன், மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.