More than 50 workers were arrested for demanding to prevent the price rise of building materials

மதுரை

கட்டுமானப் பொருட்களின் விலையேற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கட்டுமான தொழிலாளர்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டோரை காவலாளர்கள் கைது செய்தனர்.

தமிழகத்தில் தற்போது மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் தட்டுப்பாட்டினால் கட்டிட தொழில்கள் மிகவும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளது.

இந்த நிலையில் சிமெண்டு, கம்டபி, செங்கல் உள்ளிட்ட பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளது. இதனால் கட்டிட வேலைகள் பாதிக்கப்பட்டதோடு, புதிய கட்டிடங்கள் கட்டப்பட முடியாமலும், ஏற்கனவே நடைபெற்ற கட்டிடப் பணிகள் பாதியில் நிற்பதாலும் கட்டுமானத் தொழிலாளிகள் வேலையிழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதனை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், மணல் தடையில்லாமல் கிடைக்கக் கோரியும், கட்டுமானப் பொருட்களின் விலையேற்றத்தை தடுத்து, அவற்றின் விலையை குறைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சோழவந்தானில் உள்ள கட்டுமானத் தொழிலாளர்கள் சம்மேளன சங்கத்தின் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மாவட்ட நிர்வாகிகள் அரவிந்தன், பிச்சைராஜன் தலைமையில், கிளைச் சங்க நிர்வாகிகள் சிவசுப்பிரமணி, ராஜூ, ஜோசப் ஆகியோர் முன்னிலையில் வட்ட பிள்ளையார் கோவிலிருந்து ஜெனகை மாரியம்மன் கோவில் வரை தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பிக் கொண்டு ஊர்வலமாக வந்தனர்.

அப்போது அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த துணை காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) முகேஸ் உத்தரவின் பேரில் சோழவந்தான் காவல் ஆய்வாளர் கிரேஸ் சோபியாபாய் உள்ளிட்ட போலீசார் மறியலில் ஈடுபட்ட 50–க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.

அவர்க”ளை பேரூராட்சி திருமண மண்டபத்தில் தங்க வைத்து பின்னர் மாலையில் விடுவித்தனர்.